வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (03/12/2018)

கடைசி தொடர்பு:17:29 (03/12/2018)

`ரொம்பவே கஷ்டப்படுகிறோம்...!'  - காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடம் குமுறிய எடப்பாடி பழனிசாமி

`மத்திய அரசு பெரிதாக எந்த உதவியும் செய்யவில்லை. ஏராளமான நிதி தேவைப்படுகிறது' என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

`ரொம்பவே கஷ்டப்படுகிறோம்...!'  - காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடம் குமுறிய எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் சபாநாயகர் தனபாலையும் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள். `கஜா பாதிப்புப் பகுதிகளில் ஒரு லட்சம் வீடுகள் போதாது. இரண்டு லட்சமாகக் கட்டிக் கொடுக்க இருக்கிறோம். ஆனால், மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை' என ஆதங்கப்பட்டிருக்கிறார் முதல்வர். 

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் சபாநாயகர் தனபாலைச் சந்திக்கக் சென்றனர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள். சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, கொறடா விஜயதரணி உட்பட ஏழு எம்.எல்.ஏ-க்கள் இந்தச் சந்திப்பில் உடன் இருந்தனர். சுற்றுப்பயணத்தில் இருப்பதால் முதுகுளத்தூர் எம்.எல்.ஏ மலேசியா பாண்டியன் மட்டும் இந்தச் சந்திப்பில் இடம்பெறவில்லை. முதலில் சபாநாயகரை சந்தித்த எம்.எல்.ஏ-க்கள், `கஜா புயல் பாதிப்பு, மேக்கேதாட்டூ விவகாரம் என விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. அவையை உடனே கூட்டுங்கள்' என வலியுறுத்தி மனுவைக் கொடுத்துள்ளனர். சபாநாயகரும், `மற்றவர்களை எல்லாம் கலந்து ஆலோசித்துவிட்டு முடிவெடுக்கிறேன்' எனக் கூறி அனுப்பியிருக்கிறார். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது அறையில் சந்தித்துப் பேசியுள்ளனர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்.  

விஜயதரணி எம்.எல்.ஏ

சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, `மேக்கேதாட்டூ விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; விரைவில் அவையைக் கூட்ட வேண்டும்' எனக் கூற, `மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்க இருக்கிறோம். மத்திய நீர்வள ஆணையரகமும் நமக்கு ஆதரவாக இருக்கிறது. எனவே, நீதிமன்றத்தில் விரைவில் தடை உத்தரவு வாங்குவோம். நிச்சயமாக வெற்றி பெறுவோம். அவையைக் கூட்டுவதற்கும் முயற்சி எடுக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர், `புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் அதிகப்படியான துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்' எனக் கூற, `புயல் பாதிப்புகளைச் சீர்செய்யும் முயற்சியில் அரசு தீவிரமாக இயங்கி வருகிறது. நிதிப் பற்றாக்குறை இருந்தும்கூட பேரிடர் மேலாண்மையின் மூலம் எங்களால் முடிந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். சொல்லப் போனால், ரொம்பவும் கஷ்டப்பட்டுத்தான் புயல் நிவாரணப் பாதிப்புப் பணிகளைச் சீரமைத்து வருகிறோம். உதய் மின்திட்டத்தின் மூலமாக மின் கம்பங்களைச் சரிசெய்யும் பணிகள் நடந்து வருகின்றன' என்றவர், 

காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி

`மின் வசதிகளைச் சீர்செய்வதில் ஏராளமான சிரமங்கள் இருக்கின்றன. வயல் வெளிகளுக்குள் சென்று பணிகளை மேற்கொள்வதில் இடையூறுகள் இருக்கின்றன. 200 கிலோமீட்டர்களுக்கு மேல் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை ஒழுங்குபடுத்தும் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறோம். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 14 விதமான நிவாரணப் பொருள்களை உள்ளடக்கிய ஆறு லட்சம் பைகளைத் தயாரித்து வழங்கியிருக்கிறோம். இந்தப் பொருள்களை அந்த மக்கள் 20 நாள்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பணமாகவும் பொருளாகவும் அந்த மக்களுக்கு உதவி வருகிறோம்' என நிதானமாக எடுத்துக் கூறியிருக்கிறார் முதல்வர். 

தலைமைச் செயலகம்

இந்தச் சந்திப்பில் இறுதியாகப் பேசிய எம்.எல்.ஏ ஒருவர், `புயல் பாதித்த பகுதிகளில் ஒரு லட்சம் வீடுகளைக் கட்டித் தருவதாக அறிவித்திருக்கிறீர்கள். அதற்கு மேலும் அதிகப்படியான வீடுகள் சேதமடைந்துள்ளதே' எனக் கூற, `ஒரு லட்சம் வீடுகள் என்பதை 2 லட்சமாகச் செய்து முடிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம்' எனக் கூறிக் கொண்டிருக்கும்போது, `மத்திய அரசு பெரிதாக எந்த உதவியும் செய்யவில்லை. ஏராளமான நிதி தேவைப்படுகிறது' என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.