``ஒரு கோடி ரூபாய் கடனை எப்படி அடைப்பேன்?!" - தேங்காய் வியாபாரி அருள்ராஜ் வேதனை | Debt worth one crore... Gaja cyclone affected a coconut seller

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (03/12/2018)

கடைசி தொடர்பு:18:35 (03/12/2018)

``ஒரு கோடி ரூபாய் கடனை எப்படி அடைப்பேன்?!" - தேங்காய் வியாபாரி அருள்ராஜ் வேதனை

"வங்கியில் வாங்கிய கடன் ஒரு கோடி ரூபாய் வரை தற்போது இருக்கிறது. வியாபாரம் சுழற்சி முறையில் நடக்கும்போது இந்தத் தொகையைத் திருப்பிச்செலுத்துவது நன்முறையில் நடந்துவந்தது. தற்போது கஜா புயலால் தென்னை விவசாயிகள் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்ட சூழலில் வங்கிக்கடன் பெரும்பிரச்னையாக உருவெடுத்துள்ளது."

``ஒரு கோடி ரூபாய் கடனை எப்படி அடைப்பேன்?!

``ஒரு லட்சம், ஒன்றரை லட்சம் என விவசாயிகளுக்கு அட்வான்ஸ் கொடுத்துதான் வியாபாரம் செய்துவருகிறேன். அதற்காகவே வங்கியில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கியிருந்தேன். தற்போது அதைத் திருப்பிச்செலுத்த வழி தெரியாமல் விரக்தியில் இருக்கிறேன்" என்றார் பட்டுக்கோட்டை அருகிலுள்ள புனல்வாசல் கிராம தேங்காய் வியாபாரி வின்சென்ட் அருள்ராஜ்.

அருள்ராஜ் தேங்காய்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த தேங்காய் வியாபாரியான அருள்ராஜுக்கு இரண்டு தம்பிகள். மூவருக்கும் பொதுவாக மொத்தம் 20 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதில் 15 ஏக்கருக்கு தென்னைப் பயிரிட்டுள்ளார்கள். மிச்சமுள்ள 5 ஏக்கர் நிலத்தில் பருவத்துக்கேற்ப வெவ்வேறு பயிர்கள் பயிரிட்டு வருகிறார்கள். தென்னந்தோப்பில், 28 ஆண்டுகளாக வளர்த்த 750 மரங்கள் இருக்கின்றன. இவற்றில் கஜா புயலால் 300 மரங்களுக்கு மேல் வேரோடு சாய்ந்துவிட்டன. 

விவசாயம் தவிர தேங்காய் வியாபாரத்தை முக்கியத் தொழிலாகக் கடந்த 10 ஆண்டுகளாகச் செய்துவருகிறார் அருள்ராஜ். புனல்வாசல் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 200 தென்னந்தோப்பு விவசாயிகள் இவரது வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். மாதம் 4 - 5 லட்சம் வரை தேங்காய்களைப் பறித்து வியாபாரம் செய்துவருகிறார். அவர்களிடம் பறித்துவந்த தேங்காய்களை ஒரு மாதத்துக்கு இருப்பு வைத்து, அதன் பின்னர் மட்டை உறித்து பேக்கிங் செய்து மும்பை, கொல்கத்தா, கயா போன்ற நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார். மேலும், ஏற்றுமதி ஏஜென்ட்கள் மூலம் சவுதி அரேபியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார். விவசாயிகளின் தோப்பில் தேங்காய் வாங்கும்போது அதற்கு அட்வான்ஸ் தொகை கேட்பார்கள். பின்னர் அந்தத் தொகையை தேங்காய் விற்பதன் மூலம் கழித்துவருவார்கள். 

தென்னை

தென்னை விவசாயிகளுக்குத் தரும் அட்வான்ஸ் தொகைக்காக அருள்ராஜ், வங்கியில் கடன் வாங்குகிறார். வாங்கிய தொகையை முறையாகத் திருப்பிச்செலுத்தியும் வருகிறார். இப்படி வங்கியில் வாங்கிய கடன் ஒரு கோடி ரூபாய் வரை தற்போது இருக்கிறது. வியாபாரம் சுழற்சி முறையில் நடக்கும்போது இந்தத் தொகையைத் திருப்பிச்செலுத்துவது நன்முறையில் நடந்துவந்தது.

தற்போது கஜா புயலால் தென்னை விவசாயிகள் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்ட சூழலில் வங்கிக்கடன் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இன்னொரு பக்கம் இவரது சொந்தத் தோப்பிலும் பெரும்  இழப்பு ஏற்பட்டுள்ளது. அதைச் சீர்ப்படுத்தவும் பெரும்பணம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக வேதனையான மனநிலையில் இருந்தவரை திடப்படுத்தியபின், அவருடைய அடுத்தகட்ட நடவடிக்கை, அரசிடம் அவருடைய நிவாரண உதவி என்ன என்பது குறித்துக் கேட்டோம்.

அருள்ராஜ்``எனக்கு இரண்டு குழந்தைகள். கஜா புயல் எங்கள் பகுதியையே புரட்டிப்போட்டதால் வங்கிக்கடன் எனது கழுத்தை நெரிப்பதாக உணர்கிறேன். இதிலிருந்து மீண்டுவர எனது பங்கு விவசாய நிலத்தை விற்று ஓரளவு கடனை அடைக்கலாமென்று பார்த்தால், தற்போதைய நிலையில் யாரும் நிலத்தை வாங்கத் தயாராக இல்லை. எனக்குக் கடனுதவி செய்த சிட்டி யூனியன் பேங்க் மேலாளரிடம் என் நிலையை விளக்கினேன். அதன் பின்னர் கும்பகோணத்தில் சிட்டி யூனியன் பேங்க் மண்டல மேலாளரையும் சந்தித்துப் பேசினேன்.

`ஓராண்டுக்கு மட்டும் வட்டியை ரத்து செய்தால் பணத்தைத் திருப்பிச்செலுத்த உதவியாக இருக்கும். அல்லது மூன்றாண்டுகளுக்கு குறைந்த வட்டியை வசூலித்தால் புயலின் பாதிப்பிலிருந்து எங்களால் மீண்டு வர இயலும்’ என்று எடுத்துக்கூறினேன். என்னைப் போலவே எங்கள் பகுதியிலிருந்து மேலும் பலர் இந்த வங்கிக்கு வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். எங்கள் கோரிக்கைகளை அவர் கேட்டுக்கொண்டார். அடுத்த வாரம் எங்கள் பகுதிக்கு வந்து வாடிக்கையாளர்களிடம் கருத்துக்கேட்டு முடிவெடுப்பதாகக் கூறியிருக்கிறார்.

அரசு தற்போது தென்னைக்கு வழங்குவதாக அறிவித்துள்ள தொகையை குறைந்தபட்சம் 5,000 ரூபாயாக அதிகரித்துத் தருவதாக இருந்தால், எங்கள் விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவும். பின் மெள்ள மெள்ள பேரிழப்பிலிருந்து மீண்டு வருவார்கள். அரசு மனிதாபிமானத்தோடு பரிசீலித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். அதேபோல எங்கள் டெல்டா விவசாயிகளின் விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரமான தென்னை உள்ளிட்ட அனைத்துப் பயிர்களின் சேதத்துக்கும் இழப்பீட்டை உயர்த்திக்கொடுப்பதன்மூலமே எங்கள் பகுதி மக்களால் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட முடியும். தனியார் வங்கிகளும் எங்கள் நிலையை உணர்ந்து மனிதாபிமானத்துடன் உதவ முன்வரவேண்டும்" என்றார்.

கஜா புயலின் சேதம் என்பது தென்னந்தோப்பு விவசாயிகளை மட்டும் பாதிக்காமல், சங்கிலித்தொடர்போல அதைச் சார்ந்துள்ள பலரையும் கடுமையாகப் பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வின்மீது நம்பிக்கையளிக்கும்விதமாகச் செயல்பட வேண்டியது அரசின் கடமை.


டிரெண்டிங் @ விகடன்