பொதுத்தேர்வில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு தங்கப்பதக்கம்! - ஓ.பி.எஸ் பேச்சால் குழம்பிய அதிகாரிகள் | Deputy CM OPS speech in theni government function

வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (03/12/2018)

கடைசி தொடர்பு:18:29 (03/12/2018)

பொதுத்தேர்வில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு தங்கப்பதக்கம்! - ஓ.பி.எஸ் பேச்சால் குழம்பிய அதிகாரிகள்

தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்ற மாணவ- மாணவிகளுக்கான இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில்,  துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஓபிஎஸ்

பள்ளிக்கல்வித்துறை சார்பில், 2017−2018 கல்வி ஆண்டில் 10,192 மாணவ, மாணவிகளும் 2018−2019 கல்வி ஆண்டில் 10,703 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 20,895 மாணவ- மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது. அதன் மொத்த மதிப்பு 7 கோடியே 76 லட்சத்து 62,000 ரூபாய். இந்நிகழ்ச்சியில் பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட கல்வி வளர்ச்சி பற்றியும், ஆசிரியர்களின் பணிகள் பற்றியும் பேசினார். அப்போது, ``10, 11, 12-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் தங்கப்பதக்கம் வழங்கப்படும்" என்றார்.

மாணவர்களிடையே ஏற்படும் மதிப்பெண் அடிப்படையிலான வேறுபாடுகளால் தற்கொலைகள் அதிகரித்ததை அடுத்து, பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்போது முதல், இரண்டாம், மூன்றாம் இடம் என அறிவிக்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்தது. இதைக் கல்வியலாளர்கள் வெகுவாகப் பாராட்டினர். இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் முதல் இடம் பிடிப்பவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என ஓ.பி.எஸ் பேசியது, விழாவுக்கு வந்திருந்த அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. 

இலவச மிதிவண்டி வழங்கி பேசும் ஓபிஎஸ்

தொடர்ந்து, பி.சி பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஓ.பி.எஸ் கலந்துகொண்டார். விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பசுமை வீடுகள் திட்டத்தின்படி 161 பயனாளிகளுக்கும், குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின்படி 190 பயனாளிகளுக்கும் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும்,  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அம்மா இருசக்கர வாகனம் திட்டத்தின் கீழ் 149 பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. இவ்விரண்டு நிகழ்சிகளிலும், தேனி எம்.பி பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்பட்ட இந்த குழப்பம் தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை தொடர்புக்கொண்டு கேட்டோம். அப்போது அவர், ``மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து மதிப்பெண் பெற்ற பட்டியலைப் பெற்று, நான் தங்கப் பதக்கம் வழங்குவேன்’’ என்றார்.