வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (03/12/2018)

கடைசி தொடர்பு:20:00 (03/12/2018)

`அமைச்சர் நிகழ்ச்சியை முடிச்சுட்டு வர்றேன்' - விவசாயிகளைக் காக்க வைத்த கலெக்டர்!

`சாண் ஏறினால் முழம் சறுக்கும்' என்ற பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ விவசாயிகளுக்கு கச்சிதமாகப் பொருந்தும். அதிலும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் நிலை பரிதாபத்துக்குரியது. பெரியளவில் அணைகள், ஆறுகள், வாய்க்கால் பாசனம் இல்லாத மாவட்டம். ஆழ்துளைக் கிணறு, திறந்த நிலை கிணறுகளை நம்பி விவசாயம் செய்ய வேண்டிய நிலை. இந்த சீசனில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பயிர் மக்காச்சோளம்.

கலெக்டரிடம் மனு

விதைத்த முதல் நாற்பது நாள்கள் மழையில்லாமல் கடும் வறட்சி நிலவியது. ஓரளவு மழை கிடைத்த நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அந்த மகிழ்ச்சியைச் சிதைத்தது அமெரிக்க படைப்புழு. கும்பல் கும்பலாக மக்காச்சோளப் பயிரில் படையெடுத்தன. அதையும் ஓரளவு சமாளித்து வந்த நிலையில், கஜா புயல் ஒட்டுமொத்த மக்காச்சோளப் பயிரையும் காவு வாங்கிக்கொண்டது. என்ன செய்வதென தெரியாமல் கண்கள் குளமாக நிற்கிறார்கள் விவசாயிகள். இயற்கை பேரிடர் நிகழும்போது விவசாயிகளுக்கு கைகொடுப்பதற்காக பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் கடந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யவில்லை. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமாக ஏக்கருக்கு 30,000 ரூபாய் தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்த நிலையில், இன்று ஆத்தூர் எம்.எல்.ஏவும், தி.மு.க துணைப் பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ சக்கரபாணி, பழநி எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார், நத்தம் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம் ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் வினய், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இருந்தார். ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க வேண்டும் எனக் கூறிய எம்.எல்.ஏ-க்களிடம், கலெக்டர், அமைச்சர் நிகழ்ச்சியில் இருக்கிறார். அது முடிந்தவுடன் வருவார்' என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். இதனால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நான்கு எம்.எல்.ஏ-க்கள், விவசாயிகள் காத்திருந்தனர். ஒருவழியாக அமைச்சர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வந்து சேர்ந்தார் கலெக்டர். 

விவசாயிகள்

 அதன் பிறகு, விவசாயிகள் சார்பில் ஏராளமான கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் ஐ.பெரியசாமி தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் வழங்கினர். ``மாவட்டத்தில் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். கொடைக்கானல் பகுதியை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பதால் விவசாயக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு சரிவரச் செய்யவில்லை. அதிகாரிகள், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகப் போகாமல், ஆளும் கட்சியினரின் தலையீடு காரணமாக குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் சென்று கணக்கெடுக்கிறார்கள். கொடைக்கானல் பகுதியில் விவசாய நிலங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற அனுமதி அளிக்காமல் இழுத்தடிக்கிறார்கள். உடனடியாக அனுமதி தரவேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் பணம் செலுத்தக் கால அவகாசம் கொடுக்க வேண்டும்'' எனக் கோரிக்கைகளை முன்வைத்தனர். 

அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கிறேன். என கலெக்டர் உறுதியளித்தார். இரண்டு மணி நேரம் மக்கள் பிரதிநிதிகளையும், விவசாயிகளையும் கலெக்டர் காக்க வைத்தது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் இன்று கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க