வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (03/12/2018)

கடைசி தொடர்பு:20:40 (03/12/2018)

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்புச் சட்டம்! - கொந்தளிக்கும் மக்கள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சட்டசபையில் சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர், மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையின் மாசுபாடு குறித்து ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட மேகாலயா மாநிலத்தின் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, கடந்த சில நாள்களுக்கு முன்பு பசுமைத் தீர்ப்பாயத்தில், ``ஸ்டெர்லைட் ஆலை முடப்பட்டது தவறு” என அறிக்கை சமர்ப்பித்தார். இந்த அறிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், தருண் அகர்வால் குழு சமர்ப்பித்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட, சட்டசபையில் கொள்கை முடிவு எடுத்து சிறப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம்

இன்று மக்கள் ஆயிரக்கணக்கில் திரள்வார்கள் என உளவுத்துறைக்கு நேற்றே கிடைத்த தகவலின் அடிப்படையில் நெல்லை சரக டி.ஐ.ஜி., கபில்குமார் சரத்கர், மாவட்ட எஸ்.பி., முரளிரம்பா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வெளிப்புற வாயில், உட்புற வாயில், ஆட்சியர் அலுவலக முகப்பு பகுதி என 3 அடுக்கு பாதுகாப்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுதவிர, ஆட்சியர் அலுவலகம் செல்லும் சில பகுதிகளிலும் போலீஸார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அரசு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மனு அளிக்க வந்த பொதுமக்கள் சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம்

முதலில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தமிழர் கூட்டமைப்பினர் வரத் துவங்கினர், அவர்களைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை அருகில் உள்ள பண்டாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வாகனங்களில் வந்து திரண்டனர். இதற்கிடையில் இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், ஜனநாயக மாதர் சங்கத்தினர் என ஆங்காங்கே திரண்டதால் போலீஸார் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிப் போயினர். பொதுமக்கள் மற்றும் பல அமைப்புகளைச் சேர்ந்த அனைவரின் கோரிக்கையும், ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பதுதான்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, ``ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக அறிக்கை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக திட்டமிடப்பட்டு நியமிக்கப்பட்டதுதான் தருண் அகர்வால் ஆய்வுக்குழு. ஆலையின் கைக்கூலியாகச் செயல்பட்ட இந்த ஆய்வுக்குழு ஆதரவாகவே அறிக்கை அளித்துள்ளது. ஆலை மூடப்பட்டுவிட்டது. இதற்கு அரசு வெளியிட்ட அரசாணையே போதும். ஆலைக்கான அரசு அல்ல, மக்களுக்கான அரசுதான் எனச் சொல்கிறார்கள். அப்படியென்றால் சட்டமன்றத்தைக் கூட்டி சிறப்புச்சட்டம் இயக்க மறுப்பது ஏன்?.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம்

சிறப்புச் சட்டம் இயற்றப்படும் வரை எங்களது அறப்போராட்டம் தொடரும். இது தூத்துக்குடி மக்களுக்கான போராட்டம் மட்டுமல்ல. ஜல்லிக்கட்டுபோல ஒட்டுமொத்த தமிழர்களுக்கான போராட்டம் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார். தொடர்ந்து ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆட்சியர் அலுவலம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால், வழக்கமாக குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகள் அவசரகதியில் மனு அளித்துவிட்டுக் கிளம்பினார்கள். இன்று காலை முதல் மாலை வரை ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பாகவே காணப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க