வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (03/12/2018)

கடைசி தொடர்பு:21:00 (03/12/2018)

காவல்நிலையத்தில் நூலகம்! - திருப்பூர் காவல்துறையின் புதிய முயற்சி

திருப்பூரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் காவலர்கள் மற்றும் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் புதிதாக ஒரு நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் காவல்நிலையம்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குமரன் சாலை பகுதியில் இயங்கி வருகிறது திருப்பூர் வடக்கு காவல்நிலையம். மாநகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ளதும், புகார்களின் வரத்து அதிகமாக இருக்கக்கூடிய காவல்நிலையம் இது. புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் இயங்கி வரும் இந்தக் காவல்நிலையத்துக்கு தற்போது ஒய்ஸ் மென்ஸ் கிளப் என்ற தனியார் அமைப்பு சார்பில் நூலகம் ஒன்று அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இன்று நடைபெற்ற அதன் திறப்பு விழாவில் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் மனோகரன் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்தார். திருப்பூர் மாநகரக் காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் புகார் தொடர்பாக காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் ஆகியோருக்குப் பயனளிக்கும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

காவல்நிலையத்தில் நூலகம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய காவல்துறை உதவி ஆணையர் அண்ணாதுரை, ``திருப்பூர் மாவட்டத்திலேயே முதன்முறையாக காவல்நிலையத்தில் நூலகம் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலகத்தில் காவல் நிலையங்களில் புகார் செய்வது எப்படி என்பது குறித்த புத்தகங்கள், இந்தியாவில் உள்ள அடிப்படைச் சட்டங்கள் பற்றிய புத்தகங்கள், மனிதனுக்கு தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய புத்தகங்கள், மனதுக்கு இதமான நகைச்சுவைப் புத்தகங்கள், மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய புத்தகங்கள் என மொத்தம் 296 புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. காவல்நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் காவல்நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழல்களில் இங்குள்ள புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம். அதேபோல காவலர்கள் தங்களின் ஓய்வு நேரங்களிலும், பணி நேரம் முடிந்த பிறகும் இங்கு வந்து புத்தகங்களை எடுத்துப் படிக்க ஊக்குவிக்கிறோம்’’ என்றார்.

இந்த நூலக முயற்சி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மற்ற காவல்நிலையங்களிலும் விரிவுபடுத்தப்பட இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.