வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (03/12/2018)

கடைசி தொடர்பு:21:20 (03/12/2018)

`ஸ்டெர்லைட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவது தி.மு.க-தான்!’ - கடம்பூர் ராஜு

``ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் தொடங்குவதற்கும், பின்னர் அதன் விரிவாக்கத்துக்கும் அனுமதி அளித்தது தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான். எனவே இரட்டை வேடம் போடுவது தமிழக அரசு அல்ல. தி.மு.க-தான்” என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜு

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று (2.12.2018) சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தி.மு.க-வின் மாநிலங்களவை எம்.பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆலையால் ஏற்படும் மாசுக்கள், பாதிப்புகள் குறித்து தமிழக அரசு தனது வாதத்தை முறையாக எடுத்து வைக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது” எனக் கூறினார்.

கனிமொழி

தூத்துக்குடி தருவை மைதானத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா இன்று (3.12.2018) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் நிலைப்பாட்டை அறிந்து ஆலையை மூட வலியுறுத்தி அரசாணை வெளியிட்டு சீல் வைத்து மூடியது அரசு. ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடைபெற்று வந்த 40-வது நாளிலேயே ஆலையின் உரிமத்தைப் புதிப்பிக்க அனுமதி அளிக்கப்படாமல் ஆலைத்தரப்பு விண்ணப்பத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ரத்து செய்தது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் எந்த ஓர் ஆலையையும் இயக்க முடியாது. ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது. எனவே, ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான். ஆலை குறித்து ஆய்வு செய்வதற்காகப் பசுமைத் தீர்ப்பாயத்தில் நியமிக்கப்பட்டதுதான் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு. ஆலை இயங்கலாம் எனச் சொல்வதற்கு அந்தக் குழுவுக்கு எந்த உரிமையும் இல்லை.

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது எனத் தி.மு.க எம்.பி கனிமொழி கூறியுள்ளார். கடந்த1996-ல் ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் தொடங்குவதற்கும், பின்னர் 2006-ல், 245 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் விரிவாக்கம் செய்வதற்கும் அனுமதி அளித்தது தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான். எனவே, இரட்டை வேடம் போடுவது தமிழக அரசு அல்ல, தி.மு.க-தான்’’ என்றார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் குறித்து கேட்டபோது, ``ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தைப் பொறுத்தவரையில் மாநில அரசு மட்டுமே முடிவு எடுக்க முடியாது. மத்திய அரசின் ஒத்துழைப்பும் தேவை. மக்களின் கோரிக்கை மாநில அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசீலனை செய்யப்படும்’’ எனக் கூறிவிட்டுக் கிளம்பினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க