வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (03/12/2018)

கடைசி தொடர்பு:21:50 (03/12/2018)

`பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் 10 நாள்கள் எங்கே இருந்தனர்?’ - கேள்வி எழுப்பும் பா.ஜ.க

மணவாளகுறிச்சி மணல் ஆலை மற்றும் குமரி மாவட்டப் பகுதிகளில் வீடியோ எடுத்த பிரான்ஸ் நாட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க. வரும் 5-ம் தேதி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

பா.ஜ.க

பா.ஜ.க. கன்னியாகுமரி மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,``குமரி மாவட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரும் மேம்பாட்டு பணி, உள்கட்டமைப்பு பணிகள், வர்த்தக துறைமுகத் திட்டம் ஆகியவற்றுக்கு முட்டுக்கட்டை இடும் விதமாக சமூக விரோதிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் வெளிநாட்டு சதி இருப்பதாக பா.ஜ.க. அன்றே சொன்னது. கடந்த மாதம் 11-ம் தேதி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 பேர் டெல்லி வந்தனர். அதன்பிறகு 22-ம் தேதி மதுரை வந்துள்ளனர். இடைப்பட்ட 11 நாள்கள் எங்கு இருந்தார்கள், என்ன செய்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். மதுரையிலிருந்து கன்னியாகுமரி வருவதற்காக ஒரு பெண் மற்றும் 2 ஆண்கள் உதவி செய்துள்ளனர்.

பிரான்ஸை நாட்டைச் சேர்ந்த 2 பேர்

தென் மாவட்டங்களில் கனிமவளம் சம்பந்தமான  தொழில் செய்யும் ஒருவரின் சகோதரரை சந்தித்துள்ளனர். சுற்றுலா விசாவில் வந்த அவர்களுக்கு கடந்த 23-ம் தேதி 2 பேர் அறை எடுத்துக் கொடுத்துள்ளனர். கன்னியாகுமரி வர்த்தக துறைமுகம் அமைய உள்ள இடம் மற்றும் மத்திய அரசு நிதியில் அமைக்கப்படும் மேம்பாலங்கள் ஆகியவற்றையும், மணவாளகுறிச்சி மணல் ஆலை ஆகியவற்றையும் புகைப்படம் எடுத்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அந்த ஓட்டல் நிர்வாகம் அறையை காலிசெய்யும்படி கூறியுள்ளது. மற்றொரு இடத்தில் அவர்களுக்கு அறை எடுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் மனு அளித்துள்ளோம். நாட்டுக்கு எதிரான சக்திகளுக்கு துணைபோகும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வரும் 5-ம் தேதி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்" என்றார்.