வளைகாப்பு மொய்ப் பணத்தை கஜா பாதிப்புக்குக் கொடுத்த தம்பதி! - நெகிழ்ந்த உறவினர்கள் | Salem couples gives their baby shower money to gaja relief

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (03/12/2018)

கடைசி தொடர்பு:22:00 (03/12/2018)

வளைகாப்பு மொய்ப் பணத்தை கஜா பாதிப்புக்குக் கொடுத்த தம்பதி! - நெகிழ்ந்த உறவினர்கள்

கஜா

கஜா புயலில் கோரத் தாண்டவத்தால் பரிதவிக்கும் மக்களுக்காகப் பலரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வரும் நிலையில், சேலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களுடைய வளைகாப்பு நிகழ்ச்சியில் உறவினர்கள் அளித்த மொய்ப் பணத்தை கஜா புயல் நிவாரண நிதிப் பெட்டியில் வசூல்செய்து சேலம் கலெக்டரை சந்தித்துக் கொடுத்திருப்பது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

சேலம் பொன்னம்மாபேட்டையை அடுத்த வாய்க்கால்பட்டறையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் - சரஸ்வதி  தம்பதி. இவர்களுக்கு விஜயன், ஶ்ரீராம் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் விஜயனுக்கும் சென்னையைச் சேர்ந்த பிரபாவதிக்கும் 3 வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது விஜயனின் மனைவி பிரபாவதி 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவர்களுடைய வளைகாப்பு மொய்யைத் தான் கஜா புயல் நிவாரண நிதிக்காகக் கொடுத்திருக்கிறார்கள்.

கஜா புயல்

இதுபற்றி விஜயனிடம் கேட்டதற்கு, ``நான் எம்.பி.ஏ முடித்துவிட்டு கத்தாரில் உள்ள கார்கோ ஏர்லைன்ஸ் விமானத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறேன். நானும் என் மனைவியும் கத்தாரில் வசித்துக்கொண்டிருக்கிறோம். கத்தாரில் இருந்தாலும் கஜா புயலில் பாதிப்புகளால் மக்கள்படும் துயரத்தை டி.வியில் பார்த்து நானும், என் மனைவியும் நிறைய வேதனை அடைந்தோம்.

என் தந்தை வேளாண்மைத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவராக இருந்து அடித்தட்டு மக்களுக்காக பாடுபடக்கூடிய சமூக செயற்பாட்டாளராக இருக்கிறார். இந்த நிலையில், என் மனைவிக்கு வளைகாப்பு செய்வதாக இருவீட்டாரும் முடிவு செய்தோம். நிகழ்ச்சியில் கிடைக்கும் மொய்ப் பணத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அப்பா அறிவுறுத்தினார்.

கஜா புயல் பாதிப்பு

அப்பா சொன்னதும் நிறைய மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டேன். என் மனைவியிடம் இதைத் தெரிவித்தபோது அவரும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். அதையடுத்து, எங்க வளைகாப்பு நிகழ்ச்சியில் மொய்யாகச் சேர்ந்த 20,000 மற்றும் அப்பாவின் மண்பாண்டத் தொழிலாளர்கள் திரட்டிய 10,000 என மொத்தம் 30,000 தொகையை சேலம் கலெக்டரிடம் கொடுத்தோம்'' என்றார்.