தற்காலிகக் கழிப்பறை சகிதமாக உண்ணாவிரதத்தைத் தொடங்கிய கேரள பா.ஜ.க பொதுச்செயலாளர்! | Sabarimala row: BJP Kerala GS AN Radhakrishnan begins hunger strike

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (03/12/2018)

கடைசி தொடர்பு:23:00 (03/12/2018)

தற்காலிகக் கழிப்பறை சகிதமாக உண்ணாவிரதத்தைத் தொடங்கிய கேரள பா.ஜ.க பொதுச்செயலாளர்!

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார் பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஏ.என். ராதாகிருஷ்ணன். சர்ச்சை கருத்துகளை தவிர்ப்பதற்காக தற்காலிக டாய்லெட் வசதி பந்தல் அருகே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கேரள பா.ஜ.க பொதுச்செயலாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன்

கேரள மாநிலத்தில் சபரிமலை விவகாரத்தை முன்வைத்து பா.ஜ.க. பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது. சபரிமலையில் விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கினார். பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான வி.முரளிதரன் இதற்கு முன்பு தலைமைச் செயலகம் எதிரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, இரவு நேரத்தில் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் இயற்கை உபாதை கழிப்பதற்காகச் சென்றிருக்கிறார். அதற்கு அவர் ஓட்டலுக்குச் சாப்பிடச் சென்றதாக சர்ச்சை எழுந்தது. அதுபோன்ற ஒரு சர்ச்சை இப்போதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் உண்ணாவிரதப் பந்தல் அருகே தற்காலிக கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை

இதுகுறித்து ஏ.என். ராதாகிருஷ்ணன் கூறுகையில், ``நாடு முழுவதிலுமிருந்து சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துவதற்காக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் மூலம் சபரிமலையில் பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் முயற்சி நடந்து வருகிறது. அதுபோன்று தொடர்ந்து வழக்குப் போட்டு எங்கள் கட்சிப் பொதுச் செயலாளர் கே.சுரேந்திரனை சிறையில் அடைத்துள்ளதைக் கண்டித்தும் இந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறேன்.

உண்ணாவிரதப் போராட்டம்

கேரள முதல்வர் பினராயி விஜயன் ஐயப்ப பக்தர்களிடம் மன்னிப்பு கேட்கும்வரை இந்தப் போராட்டம் தொடரும்" என்றார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலை சென்றபோது உடன்சென்று வழிகாட்டியவர்தான் இந்த ஏ.என்.ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.