`காங்கிரஸும், பா.ஜ.க-வும் மாநிலக் கட்சிகளாக மாறிவிடும்!’ - தம்பிதுரை | Congress and bjp will turn into state parties, says Thambidurai

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (03/12/2018)

கடைசி தொடர்பு:22:30 (03/12/2018)

`காங்கிரஸும், பா.ஜ.க-வும் மாநிலக் கட்சிகளாக மாறிவிடும்!’ - தம்பிதுரை

`மத்திய அரசு மேக்கே தாட்டூவில் அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க கூடாது’ என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

தம்பிதுரை

கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகள் குறித்த மனுக்கள் பெறும் நிகழ்ச்சி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரை, ``கஜா புயலால் பாதிக்கப்பட்டதற்கு மத்திய அரசு அறிவித்த ரூ.350 கோடி இடைக்கால நிவாரணம் போதாது. ரூ.15,000 கோடி நிவாரணம் தர வேண்டும் என்று மத்திய அரசை வருகிற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வலியுறுத்துவோம்.

மேக்கே தாட்டூ

கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜ.க இடையே போட்டி நிலவுகிறது. இதனால் மேக்கே தாட்டூ பிரச்னையை மத்திய அரசு எழுப்புகிறது. தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்க தாமதப்படுத்துகிறது. காங்கிரஸும், பா.ஜ.க-வும் மாநிலக் கட்சிகளாக மாறிவிடும். காவிரியின் குறுக்கே அணை கட்டுவது சரியான இடம் மேக்கே தாட்டூவா, ஒகேனக்கல்லா என்றால், அணை கட்டுவதற்கு ஒகேனக்கல்தான் சரியான இடம்.

தம்பிதுரை

அங்கே இருந்து மின்சாரம் தயாரிக்கலாம். பெங்களூரு குடிநீர் திட்டத்துக்கு கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து நீர் எடுத்துக்கொள்ளலாம். மாநிலங்கள் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காதது வருந்தத்தக்கது. மற்ற மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது. மேக்கே தாட்டூவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது" என்றார்.