வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (03/12/2018)

கடைசி தொடர்பு:23:30 (03/12/2018)

சாதிப்பெயரைச் சொல்லி மாணவிகளை இழிவுபடுத்தும் ஆசிரியைகள்! - அரசுப் பள்ளி அவலம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் மாணவிகளை சாதிப் பெயரைச் சொல்லி ஆசிரியைகளே திட்டி இழிவுபடுத்தி வருவதாக இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

எரசக்கநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளி

``உத்தமபாளையம் வட்டம் எரசக்கநாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் படிக்கும் அருந்ததியர் மாணவிகளை மட்டும் குறிவைத்து, சாதிப் பெயரைச் சொல்லி அவதூறாகப் பேசுவது, தகாத வார்த்தைகளால் பேசி இழிவுப்படுத்துவது என அப்பள்ளி ஆசிரியைகளே இச்செயலில் ஈடுபடுவதுதான் வேதனையான விஷயம். இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியரிடம் ஏற்கெனவே புகார் செய்தும் எந்தப் பலனும் இல்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், வேதியியல் ஆசிரியை செல்வரதி மற்றும் செந்தாமரை ஆகிய இருவரும் அதிகபட்சமாக மாணவிகளை இழிவுபடுத்தி பேசிவருவதாகத் தெரிகிறது.

இதனால் மிகுந்த மன வேதனையில் மாணவிகள் இருக்கிறார்கள். சிலர் ஆசிரியைகளுக்குப் பயந்து பள்ளிக்கு வருவதையே தவிர்த்துவருகிறார்கள். இவ்விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இன்று அவரிடம் புகார் மனு அளித்திருக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்’’ என்றார் செங்கதிர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அருந்தமிழரசு.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராமச்சந்திரனிடம் கேட்டோம். ``மனுவில் கூறப்பட்டுள்ள பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகள் மற்றும் ஆசிரியைகளிடம் விசாரணை நடத்த இருக்கிறேன். விசாரணைக்குப் பின்னரே நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்’’ என்றார்.