வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:00:00 (04/12/2018)

‘பயணிகளைப் பதறவைத்த ரயில் கொள்ளையன்’ - நீதிமன்றத்தில் திடீர் சரண்!

வேலூர் மாவட்டத்தில் ரயில் பயணிகளிடம் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்த பிரபல ரயில் கொள்ளையன் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

கொள்ளையன்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி மார்க்கமாகச் செல்லும் ரயில்களில் கொள்ளை சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் துணிகரமாக அரங்கேறுகிறது. பயணிகளிடம் நகை, உடைமைகளை கொள்ளையர்கள் பறித்துச் செல்கின்றனர். குறிப்பாக, ரயில் நின்று புறப்படும் நேரங்களில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருக்கும், பெண்களின் கழுத்தில் இருக்கும் நகைகளை ஜன்னல் வழியாக எட்டிப்பிடித்து அறுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பி ஓடி விடுகின்றனர். இதுபோன்ற தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை ரயில்வே போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

அதன்படி, சித்தூர் மாவட்டம் அரகொண்டா பையம்மேகம் தெருவைச் சேர்ந்த ராமு மகன் ராஜேந்திரன் (45) என்பவரும் ரயில் பயணிகளிடம் தொடர் கொள்ளையில் ஈடுபடுவது தெரியவந்தது. ராஜேந்திரன் மீது ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ரயில்வே போலீஸ் நிலையங்களில் 6-க்கும் அதிகமான கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. போலீஸாரால்,  இவர் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில், கொள்ளையன் ராஜேந்திரன் வேலூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். அவரை, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி வெற்றிமணி உத்தரவிட்டார். இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் கொள்ளையன் ராஜேந்திரன் அடைக்கப்பட்டார்.