வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:01:00 (04/12/2018)

`என் கணவனை கைது செய்யுங்கள்’ - வேலூரில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை முயற்சி!

வேலூரில் காதல் கணவன் தன்னை விபசாரத்தில் தள்ளப்பார்ப்பதாக இளம்பெண் ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது, அவர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளம் பெண்

வேலூர் கஸ்பா பையர்லைன் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். இவரின் மகன் குமார். இவரும், அரக்கோணம் இச்சிப்புதூரை சேர்ந்த தனசேகரன் மகள் சசிகலா என்பவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, வேலூரிலேயே இருவரும் வசித்தனர். சில மாதங்களில் கணவரை பிரிந்த சசிகலா அரக்கோணத்தில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து, ‘கணவர் தன்னை விபசாரத்தில் தள்ளப்பார்ப்பதாக’ வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் புகார் அளித்தார் சசிகலா. அந்தப் புகார் மீது போலீஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், வேலூர் அனைத்து போலீஸ் நிலையத்தில் சசிகலா இன்று மீண்டும் புகார் அளித்தார். அப்போது, ‘கணவரைக் கைது செய்யக்கோரி’ போலீஸ் நிலைய வாசலில் நின்றபடி திடீரென பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சசிகலா கொடுத்த புகார் மனுவில், ‘‘இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு தான் கணவர் குமாருக்கு குடிப்பழக்கம் மற்றும் வேறு சில பெண்களுடன் தொடர்பிருப்பது எனக்குத் தெரியும். சில வருடங்கள் கழித்தே எங்களுக்குக் குழந்தை பிறந்தது.என்னுடைய அப்பா, அம்மாவின் ஆதரவு எனக்கு இல்லை. இதனால் குமாருடன் அனுசரித்து வாழ்ந்தேன். நான் 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, வேலூரில் நாங்கள் வசித்த பகுதியில் ஒரு இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து எனது கணவர் பலாத்காரம் செய்துவிட்டார்.

வழிப்பறியிலும் ஈடுபட்டார். கடந்த ஏப்ரல் மாதம் ஒருநாள் மதுபோதையில் இருந்த கணவர் குமார், என்னை அடித்து உதைத்து வீட்டில் இருந்து வெளியே தள்ளிவிட்டார்.அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டேன். என்னுடைய போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு அடிக்கடி பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கிறார். விபச்சாரத்தில் தள்ளப்பார்க்கிறார். நண்பர்களுக்கு என்னை விருந்தாக்குவேன் என்று பயமுறுத்துகிறார். என் மரணத்திற்கு என் கணவர் குமார், அவரின் அம்மா சிட்டியாம்மா மற்றும் தம்பி வினோத் தான் காரணம்’’ என்று குறிப்பிட்டிருந்தார். விஷம் குடித்த சசிகலா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். புகார் தொடர்பாக அவரின் கணவர் குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.