`தானே புயல் கஷ்டம் எங்களுக்குத் தெரியும்’ - கஜா புயலுக்கு உதவிய கடலூர் மாணவர்கள்! | Cuddalore School Student help people who affected in gaja cyclone

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:03:00 (04/12/2018)

`தானே புயல் கஷ்டம் எங்களுக்குத் தெரியும்’ - கஜா புயலுக்கு உதவிய கடலூர் மாணவர்கள்!

கடலூர் மாவட்டம் அடிக்கடி இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் மாவட்டம். இந்த மாவட்டம் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து 2011-ம் ஆண்டு தானே புயலினால் பாதிக்கப்பட்டது. மேலும் நீலம் புயல், 2015-ம் ஆண்டு வரலாறு காணாத வெள்ளம் எனத் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்துள்ளது.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் சுனாமி, தானே புயல், வெள்ளத்தின் போதும் மடவாபள்ளம் கிராமத்தில் உள்ள மக்கள் மற்றும் அப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அப்பொழுது பல மாவட்டங்களில் இருந்து பலர் நிவாரணம் மற்றும் நிதி உதவிகளை அளித்தனர். மடவாபள்ளம் கிராமத்தில் சுனாமிக்குப் பிறகு ஈஷா யோகா பள்ளி கட்டப்பட்டது. இப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு உண்டியல் கொடுக்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகள் தங்களுக்கு சிற்றுண்டி வாங்க வைத்திருக்கும் பணத்தை உண்டியலில் சேமிப்பார்கள். இந்த சேமிப்பு ஆதரவற்றோர் மற்றும் அநாதை குழந்தைகளுக்கு உதவப்படும். இதேபோல் இந்த ஆண்டு 413 மாணவ, மாணவிகள் சேமித்த பணத்தை ஆதரவற்றோர்களுக்கு உதவாமல் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதிக்குக் கொடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியருக்குக் கோரிக்கைவைத்தனர்.

கடலூர்

இதனை ஏற்றுக்கொண்ட தலைமை ஆசிரியர் மாணவ, மாணவிகளின் உண்டியலை உடைத்து, அதில் இருந்து 20 ஆயிரத்து 535 ரூபாய் பணத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கக்கோரி தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்குக் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அவர்களிடம் வழங்கினார்கள். ஏற்கனவே இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பகுதி மாணவ, மாணவிகள் தற்பொழுது கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தங்களின் சேமிப்பை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.