உயிர் காக்கும் ஆம்புலன்ஸே உயிரைப் பறித்த சோகம் - கரூர் அருகே நோயாளிக்கு நேர்ந்த அவலம்! | 108 ambulance crash near karur

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:04:41 (04/12/2018)

உயிர் காக்கும் ஆம்புலன்ஸே உயிரைப் பறித்த சோகம் - கரூர் அருகே நோயாளிக்கு நேர்ந்த அவலம்!

நோயாளி ஒருவரை ஏற்றி வந்த 108 ஆம்புலன்ஸ் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த ஆம்புலன்ஸில் பயணித்த பயணியின் உயிர் பிரிய,ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசரகால மருத்துவ நுட்பனர் ஆகியோர் படுகாயம் அடைந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 108 ஆம்புலன்ஸின் ஹெட்லைட்கள் சரியாக எரியாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என்றும் சொல்கிறார்கள்..

 
 விபத்துள்ளான 108 ஆம்புலன்ஸ்

கரூர் மாவட்டம், தோகைமலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். 65 வயதான இவருக்கு திடீரென காய்ச்சல் அதிகமாக, அவரது உறவினர்கள் அருகில் உள்ள மயிலம்பட்டி ஆரம்பசுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே உள்ள மருத்துவர்கள்,  ``இங்குள்ள மருத்துவ வசதிகள் ஜெயராமனுக்கு சிகிச்சை அளிக்க போதுமானதாக இருக்காது. அதனால்,கரூர் மதுத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லுங்கள்' என்று கையை விரித்தார்களாம். இதனால், அங்கே செயல்படும் 108 ஆம்புலன்ஸில் ஜெயராமனை ஏற்றிக்கொண்டு கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அப்படிச் செல்லும் வழியில் வெங்ககல்பட்டி என்னுமிடத்தில் சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு சுவரில் மோதி 108 ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 108 ஆம்புலன்சில் ஏற்றி வந்த நோயாளி ஜெயராமன் படுகாயமடைந்து உயிரிழந்தார். ஆம்புலன்ஸை ஓட்டிவந்த தங்கராஜ் என்பவரும்,அவருடன் வந்த அவசரகால மருத்துவ நுட்பநர் ஆண்டிவேல் என்பவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த இருவரையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

இந்நிலையில், இந்த விபத்து குறித்து நம்மிடம் பேசிய 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிலர்,"நாங்க சில மாதங்களாகவே 108 எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆம்புலன்ஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் அருதபழசாக இருப்பதாக போர்க்கொடி தூக்கி வருகிறோம். 'பழுதான ஆம்புலன்ஸ்களை சரிபண்ணி தாங்க. அப்பதான் நோயாளிகளை விரைவாக காலத்தோடு மருத்துவமனைகளுக்கு கொண்டு வர முடியும்'ன்னு கோரிக்கை வச்சுக்கிட்டு வர்றோம். இந்த சூழலில்தான்,இப்படி 108 ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகி நோயாளி இறந்துட்டார். அந்த ஆம்புலன்ஸின் முகப்பு விளக்குகள் சரியாக எரியாததால்தான், இந்த விபத்து ஏற்பட்டிருக்கு. இனியும் அரசு தாமதிக்காமல் ஆம்புலன்ஸ்களை சரி பண்ணனும். இல்லைன்னா,புதிய 108 ஆம்புலன்ஸ்களை வழங்கனும்" என்றார்கள். இந்த சம்பவம் குறித்து பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.