‘தரையில் அமரவைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள்!’ -கண்டுகொள்ளாமல் விழாவைச் சிறப்பித்த அமைச்சர் | Disabled students sitting on the Ground in minister function

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:05:00 (04/12/2018)

‘தரையில் அமரவைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள்!’ -கண்டுகொள்ளாமல் விழாவைச் சிறப்பித்த அமைச்சர்

வேலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் தரையில் அமரவைக்கப்பட்டனர். இதைக் கண்டுகொள்ளாமல் மேடையில் இருந்த அமைச்சர், கலெக்டர் பெயருக்கு விழாவில் கலந்து கொண்டுவிட்டுப் புறப்பட்டு சென்றார்.

மாற்றுத்திறன் மாணவர்கள்

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலாரில் உள்ள ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ‘மாற்றுத்திறனாளிகள் தினவிழா’ நேற்று நடைபெற்றது. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் ராமன், அரக்கோணம் எம்.எல்.ஏ. சு.ரவி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவில், ரூ.16 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் வீரமணி வழங்கினார். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை, விழாவில் சிறப்புப் பள்ளிகளை சேர்ந்த காது கேளாத, வாய் பேசாத, பார்வையற்ற, மனவளர்ச்சி குன்றிய சுமார் 700 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர் விழா நடைபெற்ற அரங்கில் தரையில் அமர வைக்கப்பட்டனர். ‘ஏதோ ஆடு, மாடுகளை ஓட்டி வந்து மந்தையில் அடைப்பது போல் மாணவ, மாணவர்களைத் தரையில் அமர வைத்திருந்தனர்.   இதைக் கண்டுகொள்ளாமல் அமைச்சரும், அதிகாரிகளும் ஒய்யாரமாக மேடையில் அமர்ந்திருந்தனர். ‘யாருக்கான விழா என்று கூடவா தெரியவில்லை’ என்று மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் பொரிந்து தள்ளினர்.