வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (04/12/2018)

கடைசி தொடர்பு:09:20 (04/12/2018)

வீடு, கணவனை இழந்து நிர்கதியில் நிற்கிறோம் - 3 பிள்ளைகளுடன் தாய் கதறல்!

கஜா புயலால் வீடு மற்றும் கணவனை இழந்து  நிர்க்கதியில் நிற்பதாகக் கூறி, பெண் ஒருவர்  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் நிவாரணம் கேட்டு மனு அளித்தார்.

                                                     

             

புதுக்கோட்டை அருகே உள்ள கல்லாலங்குடியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர், மாவட்ட ஆட்சியர் கணேஷிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ``கஜா புயல் தாக்கியதில் எங்களுடைய ஓட்டுவீடு உடைந்து தரைமட்டமானது. அப்போது, என் கணவரும் மூன்று பிள்ளைகளும் அந்த வீட்டில் இருந்தனர். பலத்த காற்றில் வீட்டின் ஓடுகள் ஒவ்வொன்றாகச் சரியத்தொடங்கியபோது பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக  அவர்களுக்கு அரணாக இருந்துள்ளார். அப்போது, அவர் தலையில் ஓடுகள் விழுந்துவிட்டன. ஏற்கெனவே, காய்ச்சலுக்காக சிகிச்சைபெற்றுவந்தார். இந்த நிலையில் ஓடுகள் விழுந்ததால், அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. கணவர் மீது முழுவதுமாக ஓடுகள் விழுந்ததால், பிள்ளைகள்  எந்தவித காயமும் இன்றித் தப்பித்தனர்.

மரங்கள் சாலைகளில் கிடந்ததால், போக்குவரத்து எதுவும் இல்லை. இதனால், மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் தவித்தோம். 18-ம் தேதி காலை  மூச்சுத்திணறல் அதிகமாகவே, டூவிலரில் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். பாதிப்புகள் குறித்துக் கேட்க வந்த வி.ஏ.ஓ மற்றும் ஆர்.ஐ-யிடம்  சம்பவம்குறித்து தெரிவித்தோம். ஆனால், அவர்கள் எங்கள் நிலைகுறித்து கண்டுகொள்ளவில்லை.  கஜா புயலால், வீடு மற்றும் கணவரை இழந்து வருமானம் இல்லாமல் நிர்க்கதியில் நிற்கிறோம். எனவே, அரசின் நிவாரணத் தொகையும், அரசின் சலுகைகளையும் வழங்கினால், என் பிள்ளைகளைப் படிக்கவைத்து வளர்க்க முடியும்’ இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.