வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (04/12/2018)

கடைசி தொடர்பு:09:40 (04/12/2018)

`மாணவர்களிடம் மதப் பிரசாரம் செய்வதா?’ - திருப்பூரில் ஆட்சியரிடம் பல்வேறு அமைப்புகள் மனு!

திருப்பூரில், யாகம் நடத்தப்போவதாகக் கூறி, இந்து அமைப்பினர் மாணவர்களிடம் மதவெறியைத் தூண்டுகிறார்கள் எனப் பெரியார் அமைப்பினர் சிலர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருக்கிறார்கள்.

பல்வேறு அமைப்புகள் மனு

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில், வரும் டிசம்பர் மாதம் இந்து அமைப்புகள் சார்பில் மகா யாகம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குப் பரப்புரை மேற்கொள்வதற்காக, இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ரத யாத்திரையாகச் செல்கிறார்கள். மேலும், அங்கு பயிலும் இந்து மாணவர்களை மட்டும் ரதத்தை வணங்கச் சொல்லி கட்டாயப்படுத்திவருவதாகவும், குறிப்பாக டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மகா யாகத்துக்கு செங்கல், நெய் போன்ற பொருள்களைத் தரும்படி மாணவர்களிடம் நிர்பந்தம் செய்வதாகவும், இதை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பெரியார் அமைப்பினர் மற்றும் கலை இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்த சிலர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த முகில் ராசு, " மாணவர்கள் மத்தியில் வேற்றுமையை உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட மதத்தின் வெறியைப் புகுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே இப்படியெல்லாம் திட்டமிட்டுச் செய்கிறார்கள். சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் பயிலும் ஒரு மாணவரின் தந்தை மூலமாகத்தான், இந்த விஷயமே வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சாதி, மத அடையாளங்களைக் கடந்து மாணவர்களாக ஒற்றுமையுடன் இருக்கவேண்டிய இடத்தில், மதத்தைத் திணிப்பது மிகப்பெரும் தவறு. பள்ளிகள், மதப்பிரச்சாரம் செய்வதற்கான இடமல்ல. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். பள்ளிகளுக்குச் சென்று மதப் பரப்புரை மேற்கொள்வதை கல்வித்துறையின் மூலம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.