வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (04/12/2018)

கடைசி தொடர்பு:10:20 (04/12/2018)

`வறுமையில் தவித்த குடும்பம்' - உதவிக்கரம் நீட்டிய புளியங்குடி காவல் ஆய்வாளர்

திருநெல்வேலி மாவட்டம் மலையடிக்குறிச்சியைச் சேர்ந்தவர், கோட்டூர்சாமி. இவர், டிராக்டர் வைத்து அவ்வூரில் விவசாயம்செய்துவந்தார். கடந்த 29-ம் தேதி, கோட்டூர்சாமி தலைவன்கோட்டை - தாருகாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தார். விசாரணையில் கோட்டூர் சாமியின் குடும்ப வறுமைநிலை தெரியவந்தது. 

காவல் ஆய்வாளர்

கோட்டூர்சாமியின் மனைவி செல்வி, கை முறிவு ஏற்பட்ட காரணத்தால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் மகாலட்சுமி, பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் கார்த்திகா, மூன்றாம் வகுப்பு படித்துவருகிறார். மகன் ரஞ்சித் குமார், ஏழாம் வகுப்பு படித்துவருகிறார். மகனுக்கும் நடக்க முடியாத அளவுக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோட்டூர்சாமியின் வருமானத்தை மட்டுமே வைத்து குடும்பம் இயங்கி வந்திருக்கிறது. இந்த விசயம் காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேலுக்கு தெரியவந்தது. இதையடுத்து, கோட்டூர்சாமியின் மகன் மற்றும் மகள்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தார் ஆய்வாளர் ஆடிவேல். புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளரின் இந்தச் செயல், ஊர் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டுவருகிறது. சமூக வளைதளங்களிலும்  பகிரப்பட்டுவருகிறது. 

இதுகுறித்து அவரிடம் பேசினோம், “விபத்து நடந்த பிறகு எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணை நடத்தும்போதுதான் கோட்டூர்சாமி குடும்பத்தின் வறுமைநிலை முழுவதுமாகத் தெரியவந்தது. நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்று கல்விச் செலவு, உணவுச் செலவு ஆகியவற்றை ஏற்பதாக உறுதியளித்திருந்தேன். எனது நண்பர்களும் உறவினர்களும் தங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை அந்தக் குடும்பத்துக்கு செய்வோம் என என்னிடம்  தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர். காவல் துறையைச் சேர்ந்த மேலதிகாரிகளும் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு என்னைத் தொடர்புகொண்டு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதாக உறுதி அளித்துள்ளனர். பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையிலேயே உதவிசெய்யும் எண்ணம் இருந்திருக்கிறது. உதவி தேவை என்றவுடன் உதவி செய்ய பலர் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால், அதற்கான வாய்ப்புதான் கிடைக்க வேண்டும். அந்த வாய்ப்பு எனக்கு இதன் மூலமாகக் கிடைத்திருக்கிறது. என்னால் முடிந்த உதவியை நான் செய்திருக்கிறேன். இது, முழுவதுமாக எனக்கு சொந்தமானது அல்ல. எனது நண்பர்கள், உறவினர்கள் எல்லோருடைய கூட்டு முயற்சிதான் இது. பலரும் தொடர்ந்து பாராட்டிவந்தாலும் அனைவருக்கும் இதில் பங்கு இருக்கிறது. வெளியூரிலிருந்தெல்லாம் அழைப்பு வருவதைப் பார்க்கும்போது,  'நீங்கள், உங்கள் ஊரில் வறுமைநிலையில் உள்ள  ஒரு குடும்பத்துக்கு உதவிசெய்யுங்கள். அதுதான் சரியாக இருக்கும்' என்று கூறிவருகிறேன். என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம் அந்தக் குடும்பத்துக்கு செய்வேன்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் ஆய்வாளர் ஆடிவேல்.