``நாமும் ஏதாவது உதவ வேண்டும் பாட்டி" - கஜா பாதிப்புக்குச் சிறுமி சௌமிகா செய்தது என்ன? | 8 years school girl donate her savings to gaja cyclone relief fund

வெளியிடப்பட்ட நேரம்: 10:48 (04/12/2018)

கடைசி தொடர்பு:13:13 (04/12/2018)

``நாமும் ஏதாவது உதவ வேண்டும் பாட்டி" - கஜா பாதிப்புக்குச் சிறுமி சௌமிகா செய்தது என்ன?

திருப்பூரைச் சேர்ந்த பள்ளி சிறுமி செளமிகாஸ்ரீ, தான் ஒருவருடமாகச் சேர்த்து வைத்த உண்டியல் சேமிப்புத் தொகையை கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கும் செயல் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

``நாமும் ஏதாவது உதவ வேண்டும் பாட்டி

திருப்பூரைச் சேர்ந்த செளமிகா என்ற சிறுமி தான் ஒருவருடமாகச் சேர்த்து வைத்திருந்த உண்டியல் சேமிப்புத் தொகையை கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கிய செயலை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். சிறுமியின் பாட்டி, அந்தச் செயல் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவகுரு - தமிழ்ச்செல்வி. இந்தத் தம்பதி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளிகளாகப் பணியாற்றி வருகிறார்கள். இத்தம்பதிக்கு செளமிகா என்ற குழந்தை உள்ளார். தன் பாட்டியின் வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டிருக்கும் செளமிகாஶ்ரீ, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி செளமிகாவுக்கு அவருடைய அப்பா மற்றும் உறவினர்கள் கொடுக்கும் சில்லரை காசுகளை, உண்டியலில் சேமித்து வைக்கும் பழக்கம் இருக்கிறது. ஆண்டு முழுவதும் சிறுசிறு தொகையாக உண்டியலில் பணத்தைச் சேர்த்து வைத்து, பின் ஆண்டு இறுதியில் தன் பாட்டியுடன் சேர்ந்து பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். 

பாட்டி கமலாவுடன் சிறுமி சௌமிகா

ஆனால், இந்தமுறை சிறுமி செளமிகாவுக்கு, ஒரு புதிய யோசனை பிறந்தது. அது என்னவென்றால் இந்தாண்டு முழுக்க தான் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை, மொத்தமாக கஜா புயல் நிவாரண நிதியாக வழங்க விரும்பியிருக்கிறார் சிறுமி செளமிகா. தன்னுடைய இந்த விருப்பத்தைப் பாட்டி கமலாவிடம் அவர் தெரிவிக்க, பின்னர் தங்களுக்குத் தெரிந்த சிலரிடம் கேட்டு, சேமிப்புப் பணத்தை எவ்வாறு நிவாரண நிதியாக வழங்குவது என்ற விவரத்தை அறிந்துகொண்டிருக்கிறார்கள். அதனடிப்படையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்த சிறுமி செளமிகாவும், அவரது பாட்டி கமலாவும் ``தமிழக முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு" செளமிகாவின் உண்டியல் சேமிப்புத் தொகையான ரூபாய் 1000- ஐ வழங்கியிருக்கிறார்கள். இது மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்த பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பின்னர் நம்மிடம் பேசிய செளமிகாவின் பாட்டி கமலா, ``பிறந்ததிலிருந்தே செளமிகாவை நான்தான் வளர்த்து வருகிறேன். எனக்கு ஆன்மிகத்தில் நிறைய ஈடுபாடு உண்டு. பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு அடிக்கடி செல்வேன். என்னுடைய பேத்தி அவளது அப்பா மற்றும் தாத்தா ஆகியோர் கொடுக்கும் சில்லரைக் காசுகளை ஆண்டுமுழுவதும் உண்டியலில் சேமித்து வைத்து, ஆண்டு இறுதியில் என்னோடு பண்ணாரி கோயிலுக்கு வந்துவிடுவாள். இந்தமுறையும் அதற்காகத்தான் சேமித்து வைத்திருந்தாள்.

புயல் நிவாரண நிதி வழங்கிய சிறுமி சௌமிகா

ஆனால், சமீபத்தில் கஜா புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதையும், பின்னர் மக்களை மீட்கப் பொதுமக்கள் பலரும் உதவிக்கொண்டு இருப்பதையும் தொலைக்காட்சியில் பார்த்த என் பேத்தி, `நாமும் உதவ வேண்டும் பாட்டி. என்னுடைய சேமிப்பையும் அந்த மக்களுக்குக் கொடுத்துவிடலாமா' என்று என்னிடம் வந்து கேட்டாள். 1000 ரூபாய் என்பது அவளைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய தொகைதான். அவளின் ஓராண்டு கால சேமிப்பு அது. அந்தப் பணத்தை மற்றவர்களுக்கு உதவ வழங்க வேண்டும் என்று, இந்த வயதில் அவள் நினைத்ததே எனக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. ஏதோ ஒருவருக்கு உதவுவதற்கு இந்தப் பணம் உதவட்டுமே என்று, அவள் கேட்டதும் நான் உடனே சம்மதம் தெரிவித்தேன். அதன்படி மாவட்ட ஆட்சியரகத்துக்குக் கிளம்பி வந்துவிட்டோம்" என்றார்.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வங்கிக்குச் சென்று, ஆயிரம் ரூபாய்க்கு வரைவோலை எடுத்து அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்தவுடன் அத்தனை பெருமிதத்தில் மிதந்தாள் சிறுமி செளமிகா.

டெல்டா மக்களின் நன்றி செளமிகாவுக்கும் போய்ச்சேரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..,!


டிரெண்டிங் @ விகடன்