வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (04/12/2018)

கடைசி தொடர்பு:10:51 (04/12/2018)

ஏழு பேர் விடுதலைக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் கைது - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!

ஏழு தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் மதுரை மாவட்டப் பொறுப்பாளரும், தி.வி.க-வின்  மாவட்டத் தலைவருமான திலீபன் செந்தில், திடீரென்று கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

கைது செய்யப்பட்ட திலீபன் செந்தில்

ஏழு  தமிழர் விடுதலைக்காக மதுரையில் தொடர்ச்சியாகக் கருத்தரங்கம், மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டம், அஞ்சல் அட்டை அனுப்புதல், தொடர் தெருமுனைக் கூட்டங்கள் எனப் பல்வேறு போராட்டங்களை நடத்திவந்த மதுரை மாவட்ட  `ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டமைப்பு’ பொறுப்பாளர்  திலீபன் செந்தில், நேற்று தல்லாகுளம் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டார். 

7 பேர்

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய  சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், "இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். அனைத்து ஜனநாயக சக்திகளையும் அரசியல் கட்சிகளையும்  இணைத்து, ஏழு நிரபராதி தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டுமென தொடர்ச்சியாக திலீபன் செந்தில் பொறுப்பாளராய் இருந்து  போராட்டங்களை முன்னெடுத்துவந்தார். திலீபன் செந்திலின் செயல்பாடுகளை  முடக்கவும்,  மொழிப் போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம் போல, ஏழு தமிழர் விடுதலைக்கான போராட்டமும் வீறுகொண்டு  மதுரை மண்ணில் எழுவதை நசுக்க  நினைத்த தமிழக அரசு, பழைய பொய்வழக்கைக்  காட்டி  கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதன்மூலம், ஏழு தமிழர் விடுதலை விஷயத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவது அப்பட்டமாகத் தெரிகிறது. இது,  வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுதலைசெய்திட வேண்டும்" என்றார்.

முகிலன்

இதேபோல நீட், ஆணவக்கொலைகள், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டங்கள் நடத்திவந்த தி.வி.க மதுரை மாவட்ட செயலாளர் மணி அமுதனைக் கைதுசெய்து, 78 நாள்களுக்குப் பிறகு தற்போது பிணையில் வந்துள்ள நிலையில், திலீபன் செந்திலை கைதுசெய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க