வெளியிடப்பட்ட நேரம்: 11:13 (04/12/2018)

கடைசி தொடர்பு:12:42 (04/12/2018)

'என் சாவுக்கு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ, ரைட்டர்தான் காரணம்'‍! - உயிரை மாய்க்க முயன்ற திருநங்கை போலீஸ் நஸ்ரியா

ராமநாதபுரம் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றிவரும் திருநங்கை நஸ்ரியா என்பவர், எலி மருந்தைக் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்கொலைக்கு முயன்ற திருநங்கை காவலர் நஸ்ரியா
 

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் நஸ்ரியா. திருநங்கையான இவர், பல்வேறு போராட்டங்களைக் கடந்து காவலர் பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டார். காவலர் பயிற்சியை முடித்த பின் ராமநாதபுரம் ஆயுதப்படையில் நஸ்ரியா பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், நேற்றிரவு, நஸ்ரியா எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  இந்த தற்கொலை முயற்சியைத் தனது செல்போனில் பதிவிட்டு, தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதை அறிந்த சிலர், நஸ்ரியாவை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நஸ்ரியா அங்கு சிகிச்சைபெற்றுவருகிறார்.

திருநங்கை போலீஸ் நஸ்ரினா

ராமநாதபுரம் ஆயுதப்படையில் எழுத்தராகப் பணியாற்றும் பார்த்திபன், சார்பு ஆய்வாளர் ஜெயசீலன் மற்றும் ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் தன்னைப்பற்றியும், தனது நடத்தைகுறித்தும் தரக்குறைவாகப் பேசுவதாகவும், அவர்களது தொந்தரவினாலேயே தான் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், தன்னை இந்த நிலைக்குத் தள்ளிய இவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் பதிவில் வெளியிட்டுள்ளார்.

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தமிழக காவல் துறையில் திருநங்கைகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பல போராட்டங்களுக்குப் பின்னரே, அந்தப் பணிகளும் அவர்களுக்குக் கிடைத்துள்ளன. இந்நிலையில், கிடைத்த பணியைக்கூட செய்ய முடியாத நிலைக்கு காவல் துறையில் பணியாற்றும் அதிகாரிகளே காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷம் குடிக்கும் திருநங்கை போலீஸ் நஸ்ரினா

இச்சம்பவம்குறித்து நஸ்ரியா, புகார் கூறியவர்கள் சார்பில் பேசிய ஆயுதப்படை ஆய்வாளர் முத்துராமலிங்கம், ''கடந்த ஆகஸ்ட் மாதம் தான் நஸ்ரியா இங்கு பணியில் சேர்ந்தார். அன்றிலிருந்து அவர் இங்குள்ள அலுவலகப் பணியிலேயே இருந்துவந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 2-ம் தேதியிலிருந்து பணிக்கு வரவில்லை. அதுகுறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. அவர், 21 நாள்களாகப் பணிக்கு வராததால், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். இந்நிலையில் நேற்று, மாவட்ட காவல் அலுவலகம் வந்த அவர், எங்கள்மீது வீண் பழி சுமத்தியுள்ளார். இவர், திருச்சியில் காவலர் பயிற்சிக் காலத்தின்போதே இதுபோல உரிய அனுமதி இன்றி வெளியேறிச் சென்றுவிட்டார். அங்குள்ள காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்து, அதன் பின்னர் மதுரையில் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார்'' என்றார்.