வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (04/12/2018)

கடைசி தொடர்பு:18:06 (04/12/2018)

"அவர் எனக்கு வேண்டாம்!" அம்மாவிடம் கெஞ்சிய ஜெயலலிதா! - நினைவு தினப் பகிர்வு

``பெரியவர்களை மதிப்பதும், ஆசிபெறுவதும் நம் வளர்ச்சிக்கு நல்லது; சுயநலத்துக்காகத் தகுதியற்றவர்களின் கால்களில் விழுவதுதான் அவமானத்துக்குரிய செயல்" என்று குரு வணக்கம் குறித்து மகளுக்குப் புரியவைக்கிறார்.

``அம்மாதான் எனக்கு எல்லாம். அவர்தான் எனக்காக எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார். எனக்கு, அந்தச் சமயத்தில் எதுவுமே தெரியாது. ஒரு குழந்தையைக் கண்ணைக் கட்டி, காட்டுக்குள் விட்டதுபோல இருந்தது” என்று ஒரு பத்திரிகையாளரிடம் பேட்டி கொடுக்கிறார், அந்தச் சிறுமி. அம்மா என்றால் யாருக்குத்தான் பாசம் இருக்காது? பெற்ற பிள்ளைகள் என்ன செய்தாலும் அதைப் பொறுத்துக்கொண்டு போவது அம்மா மட்டும்தானே?! அவருக்குத் தெரியாதா, தன் குழந்தைக்கு என்ன செய்யவேண்டும் என்று. உண்மையைச் சொல்லப்போனால், எந்தத் தாயும் பெற்ற குழந்தையை வழிதவறி நடக்கவிடுவதில்லை. அதனால்தான், என்னவோ தெரியவில்லை... அந்தச் சிறுமியும் தன் அம்மா பேச்சை மீறி நடந்ததில்லை. அதற்கான காரணமும் அந்தச் சிறுமிக்கு நிறையவே இருந்தது. 

ஜெயலலிதா

ஒருநாள் அந்தச் சிறுமியின் அம்மா, தன் மகளை அழைத்து, ```நீ நடனம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கைவைக்கிறார். அவரோ, ``I hate dance mummy... 'நீதானே நல்லா படிச்சு டாக்டர் அல்லது இன்ஜினீயர் ஆகணும்'னு சொல்லுவே... அப்போ, எனக்கெதுக்கு டான்ஸ் க்ளாஸ்லாம்" என்று மறுத்துவிடுகிறார். படிப்பு தவிர, பிற திறமைகளிலும் மகள் பரிசுகள் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படியான ஆசையை அவரது அன்னை மகளிடம் விதைக்கிறார். அப்போது மறுத்தாலும், அடுத்துவந்த நாள்களில், அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அரைமனதுடன் சம்மதிக்கிறார். நாள்கள் நகர்கின்றன. 

நாட்டியம் கற்றுத் தருவதற்காக வீட்டுக்கே குரு ஒருவர் வரவழைக்கப்படுகிறார். அவரைப் பார்த்து அச்சம்கொள்கிறார், மகள். அப்படிப்பட்டவரிடம் நாட்டியத்தைக் கற்க விரும்பாத மகள், அவரது அன்னையிடம் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லித் தட்டிக்கழித்து வருகிறார். விஷயம் அவரது அன்னைக்குத் தெரிந்து மகளை வார்த்தைகளால் தாக்குகிறார். ``இவ்ளோ செலவுசெய்து டான்ஸ் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறேன். ஏன், இப்படி வீணாக்குகிறாய்? என்னதான் உன் பிரச்னை?" என்று கோபக்கனலை வீசுகிறார். அவரது கோபத்தைப் பார்த்து பயந்த மகள், ``மம்மி... எனக்கு அந்த ஆசிரியரைப் பிடிக்கவில்லை. சிடுசிடுவெனப் பேசுகிறார்; அதட்டுகிறார். அதையெல்லாம்கூடப் பொறுத்துக்கொள்ளலாம். அவர், இன்னொன்றையும் செய்யச்சொல்லி வற்புறுத்துகிறார். அதனால் அவர் வேண்டாம். வேறொரு பெண் குருவை ஏற்பாடு செய்துகொடு" என்று பாவமாய்க் கேட்கிறார். 

அதற்கு அவரது அன்னை, ``அவர், அப்படி என்ன செய்யச் சொல்கிறார்" என்று வினவுகிறார். அதற்கு மகள், ``ஒவ்வொரு நாளும் க்ளாஸ் தொடங்கும்போது, `குரு வணக்கம்'ங்கிற பேருல அவர் கால்ல விழச்சொல்லி வற்புறுத்துறார். நீதானே மம்மி சொல்லுவே, எதற்காகவும் யார்கிட்டவும் தாழ்ந்துபோகக் கூடாதுன்னு. அதனால அவர் எனக்கு வேண்டாம்" என்கிறார். அதைக் கேட்டுச் சிரித்த அவரது அன்னை, ``பெரியவர்களை மதிப்பதும், ஆசிபெறுவதும் நம் வளர்ச்சிக்கு நல்லது; சுயநலத்துக்காகத் தகுதியற்றவர்களின் கால்களில் விழுவதுதான் அவமானத்துக்குரிய செயல்" என்று குரு வணக்கம் குறித்து மகளுக்குப் புரியவைக்கிறார். அத்துடன், பெண் நாட்டியக் குருவும் நியமிக்கப்படுகிறார். அதிலும், மகள் வெற்றிவாகை சூடுகிறார். 

இப்படி, சிறுபருவத்திலேயே சிட்டுக்குருவியாய் வலம்வந்த அந்தப் பெண், தன் அம்மாவைவிட்டுச் சற்று விலகியிருந்த நேரத்தில் உறவினர் ஒருவரால் மனஉளைச்சலுக்கு ஆளானார். ஏதோ ஒரு சூழ்நிலையில் அவரது மாமா வீட்டில் வளர்க்கப்படுகிறார். அதற்காக, பணத்தையும் செலவுக்கு அனுப்பிவைக்கிறார், அந்தச் சிறுமியின் அம்மா. பணம் மட்டுமல்ல... ஆடைகள், சிறுசிறு பொருள்கள், புத்தகங்கள் என எல்லாவற்றையும் அனுப்புகிறார். ஆனால், இவற்றையெல்லாம் தன் மாமாவே செய்கிறார், என்று நினைத்துக்கொண்ட சிறுமி, ஒருநாள் அவரிடம், ``பள்ளியில் பூகோள வரைபடத் தேர்வு நடக்கவிருக்கிறது. அதற்குப் படம் வாங்க வேண்டும். காசு கொடுங்க மாமா" என்று பாசத்துடன் கேட்டார். அவரோ, ``வாங்கிக்கலாம் போ" என்று கத்துகிறார். அத்துடன் நடையைக் கட்டும் அந்தச் சிறுமி, சில நாள்கள் கழித்து, மீண்டும் மாமாவிடம் காசு கேட்கிறார். ``சும்மா சும்மா பணம் கேட்டு ஏன் தொந்தரவு செய்ற? நினைச்சதும் பணம் தருவதற்கு அது என்ன மரத்திலா காய்க்கிறது?" என்று கடும்கோபத்துடன் சொல்ல... அவருக்குக் கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. மேலும், மாமாவின் மூத்த மகளும் அவர் பங்குக்குப் பேசிவிட்டார். அந்த வடு, நாம் சொல்லும் சிறுமிக்கு இறுதிவரை நெஞ்சில் நெருஞ்சிமுள்ளாய்க் குத்திக்கொண்டிருந்தது.

ஜெயலலிதா

இந்த நேரத்தில்தான் எதிர்பாராதவிதமாக, தன் மகளைப் பார்க்க வரும் தாயிடம், "மம்மி... இனி போகும்போது செலவுக்குக் கொஞ்சம் பணம் தந்துவிட்டுப் போ, படிப்புச் செலவுக்கு ஆகும்" என்று பரிதாபத்துடன் கேட்கிறார், மகள். ``தினமும் செலவுக்குப் பணம் தரச் சொல்லியிருந்தேனே? அதை என்ன செய்தாய்" என்று மகளிடம் கேட்கிறார், தாய். நீண்டநாள்களாய் வடுவைச் சுமந்துகொண்டிருந்த அந்தப் பிஞ்சு இதயம் அனைத்தையும் கொட்டித் தீர்த்தது. இதைக் கேட்டு நொறுங்கிப்போன அந்தத் தாயின் இதயம், துரோகம் இழைத்த மனிதரை வார்த்தைகளால் துவம்சம் செய்தார். பிறகு, அடுத்த நொடி குழந்தையை அங்கிருந்து அழைத்துச் சென்றார். 

உறவினர்தான் துரோகமிழைத்தார் என்றால், உலகமும் அப்படித்தான் இருக்கிறது என்பதை அந்தச் சிறுமி வேறொரு சம்பவத்தில் புரிந்துகொண்டார். பத்திரிகை ஒன்று, அறிவு - திறமை - அழகு ஆகிய மூன்றைவைத்து சினிமா பிரபல குழந்தைகளிடம் போட்டி ஒன்றை நடத்தியது. அதில், இந்தச் சிறுமியும் இடம்பெற்றார். மூன்றிலுமே தன் பங்கைச் சிறப்பாக வெளிப்படுத்தினார், சிறுமி. ஆச்சர்யப்பட்ட அந்தப் பத்திரிகைக் குழு, ``பாப்பா... நீதான் ஜெயிக்கப்போற" என்கிற நம்பிக்கை வார்த்தைகளை அந்தப் பிஞ்சு மனதில் விதைத்துவிட்டுச் சென்றது. இதனால், சந்தோஷத்தில் மிதந்துகொண்டிருந்த அவர், போட்டி முடிவின்போது சங்கடத்துக்குள்ளானார். ஆம், அந்தப் பத்திரிகையோ வேறொரு குழந்தையைத் தேர்ந்தெடுத்திருந்தது. நம்பிக்கை பொய்யாகிப்போனதை அந்தப் பிஞ்சுக்குழந்தையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏமாற்றத்தால் தன் மகள் வருத்தப்படுவதை உணர்ந்த அவரது அன்னை, ``எந்தவொரு ஏமாற்றத்திலும் உன்னை இழந்துவிடாதே; எந்த விஷயமும் நிரந்தரம் என்று நினைத்து உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே" என்று மகளை அணைத்து ஆறுதல் கூறினார். 

இப்படி, சிறுவயதிலேயே பலரால் ஏமாற்றப்பட்ட அந்தச் சிறுமி வேறு யாருமல்ல... பிற்காலத்தில், அகில மக்களால் `அம்மா' எனப் புகழப்பட்டு தமிழகத்தின் அரியாசனத்தில் ஐந்துமுறை வீற்றிருந்த ஜெயலலிதாதான்! நாளை அவரின் நினைவு தினம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்