வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (04/12/2018)

கடைசி தொடர்பு:22:16 (04/12/2018)

`பக்கத்து ஊர் டாஸ்மாக்குக்கு போகணும்... பஸ் பாஸ் குடுங்க..!’ - `குடி’மகனின் கோரிக்கை

டாஸ்மாக்

டாஸ்மாக் மதுபானக் கடைக்குச் செல்ல ஏதுவாக, மாவட்ட நிர்வாகம் தனக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டுமென ‘குடி’மகன் ஒருவர் அளித்த கோரிக்கை மனு ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம், வெள்ளோட்டம் பரப்பு அருகேயுள்ள வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான செங்கோட்டையன், நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் மனு ஒன்றை ஏந்திவந்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். மாவட்டத்தின் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்ற நிலையில், ‘தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாகத் திறக்க வேண்டுமென்றும், அப்படித் திறக்காத பட்சத்தில், பக்கத்து ஊரில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் செல்ல, மாவட்ட நிர்வாகம் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டுமென்றும் பகீர் கோரிக்கை வைத்தார்.

டாஸ்மாக்

இதுகுறித்து மனு அளித்த செங்கோட்டையனிடம் பேசினோம். “நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, எங்கள் ஊரில் இருந்த டாஸ்மாக் கடையைக் கடந்த ஆண்டு அப்புறப்படுத்திவிட்டார்கள். அதன்பிறகு, ஊருக்கே அருகே புதிதாக ஒரு டாஸ்மாக் கடையைக் கட்டினார்கள். டாஸ்மாக் கடையைக் கட்டி முடித்து கிட்டத்தட்ட  நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் திறக்காமல் பூட்டிவைத்திருக்கின்றனர்.

டாஸ்மாக்

பக்கத்து ஊர் டாஸ்மாக் கடைகளுக்குச் செல்ல வேண்டுமென்றால், பைக்கில் பல கி.மீ தூரம் செல்லவேண்டியிருக்கிறது. அப்படி டாஸ்மாக் கடைக்குச் சென்று வரும்போது, நிதானமிழந்து தேவையில்லாத விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, எங்களுடைய ஊரில் கட்டப்பட்டுள்ள டாஸ்மாக் கடையைத் திறந்துவிடுங்கள். இல்லாவிட்டால் பக்கத்து ஊருக்கு டாஸ்மாக் கடைக்குச் செல்ல இலவச பஸ் பாஸ் கொடுங்கள். டாஸ்மாக் கடை மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியால்தான் தமிழக அரசாங்கமே இயங்கிவருகிறது. அப்படிப்பட்ட வருவாய்க்கு முதற்காரணமாக இருக்கும் எங்களைப்போன்ற குடிமகன்களின் பாதுகாப்பிற்காக அரசு இலவச பஸ் பாஸ் கொடுக்க மறுக்கக் கூடாது” என்று கூறி நம்மைக் கிறுகிறுக்கவைத்தார்.