டெல்டா என்பது தமிழ்ச்சொல்லா? #தெரிந்துகொள்வோம் | Whether the word Delta is tamil word are not

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (04/12/2018)

கடைசி தொடர்பு:12:30 (04/12/2018)

டெல்டா என்பது தமிழ்ச்சொல்லா? #தெரிந்துகொள்வோம்

டாம்பீகம், டாக்டர், டாப்பு டக்கர் என்று வருபவை எல்லாம் பிறமொழிச் சொற்கள். தமிழ்ச்சொற்களல்ல. அவ்வாறே டெல்டா என்பதும் தமிழில்லை.

டெல்டா

டெல்டா தமிழ்ச்சொல்லா என்று கேட்டார்கள். இன்றைக்கு தமிழ்ச்சொல் எது, ஆங்கிலச் சொல் எது என்று வேறுபடுத்தி அறியும் திறன் நம்மிடையே குன்றிப்போய்விட்டது. பிறமொழிச் சொல்லை நாம் அடையாளம் காணத் தெரியவில்லை என்றால், அச்சொல் நம்மொழியில் தனக்கான இடத்தைப் பிடிக்கத் தொடங்கும். 

மகுடேசுவரன்

நம் மொழியிலுள்ள எல்லா எழுத்துகளும் ஒரு சொல்லுக்கு முதலெழுத்தாக வருவதில்லை. 

ஒரு சொல்லுக்கு முதலாக வரும் எழுத்துகள், 

சொல்லுக்கு நடுவில் வரும் எழுத்துகள், 

சொல்லுக்குக் கடைசியில் வரும் எழுத்துகள்

என்று அவை சில பண்புகளைக் கொண்டிருக்கின்றன. நகர எழுத்துகள் பெரும்பாலும் தனிச்சொல்லுக்கு முதலெழுத்தாகவே வரும். அரிதாகவே செய்ந்நன்றி, பொய்ந்நிலை என்று சொல்லிடையில் வரும். ணகர னகர எழுத்துகள் ஒரு சொல்லுக்கு முதலெழுத்தாவதில்லை. சொல்லில் பயிலாத எழுத்துகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஙகர வரிசை எழுத்துகளில் 'ங்' என்ற மெய்யைத் தவிர, ஙகர உயிர்மெய்யெழுத்துகள் பயிலும் சொற்களைக் காண இயலாது. அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்ற சொல்லில், 'ஙனம்' என்ற சொல் பயில்கிறது. ராஜேந்திரகுமார் என்ற எழுத்தாளர் இருந்தவரை ‘ஙே என்று விழித்தான்’ என்று எழுதிக்கொண்டிருந்தார். அவ்வளவுதான். ஙௌ என்ற எழுத்து பயிலும் சொல்லை எங்கேனும் கண்டதுண்டா?  

மகுடேசுவரன்

டகர வரிசை எழுத்துகள் ஒரு சொல்லுக்கு முதலெழுத்து ஆவதில்லை. எனில், டால்டா, டாம்பீகம், டாக்டர், டாப்பு டக்கர் என்று வருபவை எல்லாம் பிறமொழிச் சொற்கள். தமிழ்ச்சொற்களல்ல. அவ்வாறே டெல்டா என்பதும் தமிழில்லை, ஆங்கிலச்சொல். 

டெல்டா என்பதற்குரிய தமிழ்ச்சொல், கழிமுகம் என்பது. ஆறு கடலில் சேர்ந்து கலக்குமிடத்தையொட்டிய நிலப்பகுதிக்குக் 'கழிமுகம்' என்று பெயர். 'கடைமடை' என்றும் சொல்லலாம். 

-கவிஞர் மகுடேசுவரன்