வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (04/12/2018)

கடைசி தொடர்பு:15:25 (04/12/2018)

ஓமந்தூரார் தோட்ட பல்நோக்கு மருத்துவமனை செயல்பாடு எப்படியுள்ளது?

காலை 8 மணியிலிருந்து 11 மணிவரை பரபரப்பாகக் காணப்படும் இந்த மருத்துவமனை அதற்குப் பிறகு முற்றிலும் வேறொரு முகத்தைப் பூணுகிறது. குறிப்பாக, தரைத்தளத்திலிருந்து மேலேறி முதல், இரண்டாம்தளம், மூன்றாம்தளம் எனச் சென்றால் மற்ற எந்தத் தளத்திலும் பெரிய அளவில் ஆளரவமே இல்லை.

ஓமந்தூரார் தோட்ட பல்நோக்கு மருத்துவமனை செயல்பாடு எப்படியுள்ளது?

தி.மு.க ஆட்சியின் போது புதிய தலைமைச் செயலகத்துக்காகக் கட்டப்பட்டு, பின்னர் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு, நான்கு வருடங்களுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கிறது சென்னை மாநகரின் நடுநாயகமாக உள்ள ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனை இயங்குகிற விதத்தைத் தெரிந்துகொள்வதற்காக அங்கு சென்றோம். மொத்தம் ஐந்து மாடிகள் கொண்ட அந்தப் பிரமாண்டமான கட்டடத்தில் பெரும்பாலான அறைகள் பூட்டப்பட்டிருக்கின்றன. மருத்துவ வசதிக்காக அவற்றைப் பயன்படுத்த முடியாததே அந்த அறைகள் பூட்டப்பட்டிருப்பதற்குக் காரணம் என்று யூகிக்க முடிகிறது. மற்றபடி, அந்த வளாகத்தில் உள்ள ஒருசில அறைகள் மட்டுமே மருத்துவமனையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவை ஒழுங்குடன் இயங்குகிறதா, இங்கு வரும் நோயாளிகளுக்குச் சிறப்பான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறதா என்று விசாரித்துப் பார்த்தால் கலவையான பதில்களே வருகின்றன. 

சென்னை பல்நோக்கு மருத்துவமனை

``எங்க பாட்டிக்கு மார்பகப் புற்றுநோய்ங்க. ஒருத்தரு சிபாரிசோடத்தான் இந்த ஆஸ்பிடல்ல வந்து சேர்த்தேன். பார்க்கத்தான் அரண்மனை மாதிரி இருக்கே தவிர, மருத்துவமனைக்கு உள்ளே சரியான வசதி இல்லை. பெட்கூட இல்ல. நிறையபேரத் திருப்பி அனுப்புறாங்க. எங்க பாட்டிக்கும் பெட் கொடுக்கல. டாக்டர்ஸ் சரியா பதில் சொல்லவும் மாட்டேங்கிறாங்க. எங்க பாட்டிக்கு உடம்பு ஸ்மெல் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு. `அதெல்லாம் அப்படித்தாங்க அடிக்கும். என்ன பண்றதுன்'னு சாதாரணமா சொல்றாங்க" என்று அலுத்துக் கொண்டார் நோயாளி ஒருவரின் உதவியாளராக வந்துள்ள உறவினர்.

உள்ளே நுழைந்ததும் தரைத்தளத்தில் உள்ள பிரமாண்டமான அரங்கிற்குள் நுழைந்தேன். வட்டவடிவில் இருபுறமாக நாற்காலிகள் பிரிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த அந்த அரங்கம் சட்டசபைக்காகக் கட்டப்பட்டிருக்கிறது. உயர்தரமான மரவேலைப்பாடுகள் கொண்ட நாற்காலிகள். அதில் மாணவர்கள் ஆங்காங்கே அமர்ந்து மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர் அரங்குக்கு வெளியே காத்துக் கொண்டிருக்க, தரைத்தளம் முழுக்கப் பரபரப்புடன் காணப்பட்டது.

மருத்துவமனை வாசலில் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பேசியபோது, ``எங்க வீட்டுக்காரருக்கு கேன்சர்ங்க. எல்லாம் செக் பண்ணாங்க. `இப்போ பெட் இல்ல. பெட் கிடைச்சதும் சொல்லி அனுப்புறேன்'னு சொல்லி இருக்காங்க. என்ன பண்றதுன்னு தெரியல" என்றார். தன்னைப் புகைப்படம் எடுக்க அந்தப் பெண் அனுமதிக்கவில்லை. விசாரித்தவரை புற்றுநோயாளிகளுக்குப் போதிய படுக்கைகள் இல்லை என்பது உறுதியாகத் தெரிந்தது.

காலை 8 மணியிலிருந்து 11 மணிவரை பரபரப்பாகக் காணப்படும் இந்த மருத்துவமனை அதற்குப் பிறகு முற்றிலும் வேறொரு முகத்தைப் பூணுகிறது. குறிப்பாக, தரைத்தளத்திலிருந்து மேலேறி முதல், இரண்டாம்தளம், மூன்றாம்தளம் எனச் சென்றால் மற்ற எந்தத் தளத்திலும் பெரிய அளவில் ஆளரவமே இல்லை. மிகப்பெரிய மண்டபத்தில் திருமண நிகழ்வு முடிந்ததும் ஆங்காங்கே ஓரிரு ஆட்கள் சிதறியிருப்பது போன்ற தோற்றத்தை அது கொடுத்தது. ஒவ்வொரு தளத்திலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அறைகள் இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் பூட்டப்பட்டிருக்கின்றன. வழிக்கேட்டுச் செல்லக்கூட உள்ளே ஆளில்லை. ஒட்டுமொத்த கட்டடத்தில் 25 சதவிகிதப் பகுதி மற்றும் அறைகள்தான் மருத்துவமனையாகச் செயல்படுகிறது.

மருத்துவ வார்டுகளாக இயங்கும் ஒருசில அறைகளுக்கு வெளியே மட்டும் ஆட்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ``சொந்த ஊரு திருவள்ளூருங்க. எங்க வீட்டுக்காரர்க்கு கிட்னி பெயிலியர். ரெண்டு மாசமா இங்கதான் பாக்குறோம். நல்லா பாக்குறாங்க. டைம்க்கு சாப்பாடுலாம் கூட கரெக்டா கொடுத்துடுறாங்க. என்னவொண்ணு சாயங்காலம் ஆனா கொசு ஆளை சாப்பிட்டுடும்" என்றார் இன்னொரு பெண்மணி.

சென்னை பல்நோக்கு மருத்துவமனை

ஒரு நோயாளி மருத்துவமனையின் உள்ளே நுழைந்ததும் அவருக்கு முதலில் கிடைக்க வேண்டியது நம்பிக்கை. அதை ஏற்படுத்தும் சூழல், அமைதியைத்தான் கொடுக்க வேண்டும். அமானுஷ்ய உணர்வைக் கொடுக்கக் கூடாது. ஆனால், இந்த மருத்துவமனை பல விஷயங்களில் அதற்கு முற்றிலும் எதிரான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து பன்னோக்கு மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி (Nodal Officer) ஆனந்த் குமாரிடம் பேசினேன்.

``படுக்கைகள் பற்றாக்குறை என்று சொல்ல இயலாது. ஆனால் இன்னும் நூறு படுக்கைகள் அதிகப்படுத்தச் சொல்லி மேலிடத்தில் கேட்டிருக்கிறோம். மருத்துவமனை வளாகத்திலும் குடிநீர் வசதி ஏற்படுத்தத் திட்டங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு படுக்கை நோயாளிக்கும் ஒரு கொசுவலை கொடுத்திருக்கிறோம். மருத்துவர்கள் எந்நேரமும் இருக்க, இது அரசுப் பொது மருத்துவமனை இல்லை. மருத்துவர்கள் தினசரி கண்காணிப்பு நேரம் போக ஐந்து மருத்துவர்கள் எப்போதும் அவசரத்துக்கு இருப்பார்கள். தமிழகத்திலேயே இது முன்னோடி மருத்துவமனையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்புகூட தெலங்கானா மாநிலத்திலிருந்து இந்த மருத்துவமனை இயங்கும்விதத்தைக் குறிப்பெடுத்துக் கொண்டு போக வந்தார்கள். அந்த அளவுக்குத் தரமானதாக இது இயங்கிக் கொண்டிருக்கிறது" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்