வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (04/12/2018)

கடைசி தொடர்பு:14:45 (04/12/2018)

`அழைப்பிதழ் அச்சடிப்பு; 8-ம் தேதி அமெரிக்காவில் மொய் விருந்து!' - தமிழர்களுக்காக நிதி திரட்டும் பெண்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிதி அளித்து உதவும் வகையில், அமெரிக்காவில் உள்ள 'பெண்கள் மேம்பாட்டுக் குழு' அமைப்பின் சார்பில், அமெரிக்காவில் மொய் விருந்து விழா நடத்த முடிவுசெய்துள்ளனர்.

நிதி திரட்டும் பெண்கள்


தமிழகத்தில் சுழற்றியடித்த கஜா புயலால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. இங்குள்ள மக்கள் பலரும், புயல் அடித்து 15 நாள்களுக்கு மேலாகியும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர். குறிப்பாக, மக்கள் வீடுகள், விவசாயப் பயிர்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இந்த நிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் நிவாரண  உதவிக்காக நிதி அளித்துள்ளார். இதேபோல, பிற மாநிலங்களில் இருந்தும் நிவாரண உதவி  கிடைத்துவருகிறது. மேலும்,  சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு  நிதி அளித்துவருகின்றனர்.

புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள்

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வ அமைப்புகள், அரசுத்துறையைவிட முழுவீச்சில் செயலாற்றி, மக்களுக்கு இயன்ற நிவாரணங்களை அளித்துவருகின்றனர். வெளிநாடுகளில் இருந்தும் உதவிகள் வருகிறது. இதன் தொடர்ச்சியாக,  அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் செயல்பட்டுவரும் 'வாகை' பெண்கள் மேம்பாட்டுக் குழு முன் வந்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி திரட்டுவதற்காக டிசம்பர் 8-ம் தேதி மொய் விருந்து விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதன்மூலம் வரும் தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும் முடிவுசெய்துள்ளது.

பாதிக்கப்பட்ட மின்கம்பம்

இதுகுறித்து, ‘கல்வியாளர்கள் சங்கமம்’ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர் சதீஷ்குமாரிடம் பேசினோம்,  'அமெரிக்காவில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்களை அணுகி உதவி கோரினோம். இதன் பலனாக, வாகை பெண்கள் மேம்பாட்டுக்குழு உதவ முன்வந்தது. அமெரிக்காவில், மொய் விருந்து நடத்தி, அதில் கிடைக்கும் தொகையை முழுவதுமாக நிவாரண நிதிக்கு அளிக்க இருக்கிறார்கள்' என்று தெரிவித்தனர். அழைப்பிதழ்களும் அச்சடிக்கப்பட்டுவிட்டது. டிசம்பர் 8-ம் தேதி மொய் விருந்து நடக்கிறது. யாமினி, அனிதா, லாவண்யா, கரோலின் ஆகிய 'வாகை' பெண்கள் ஏற்பாடுசெய்துவருகின்றனர்.

பாதிக்கப்பட்ட படகுகள்

அதில் கிடைக்கும் நிதியை வைத்து, தன்னார்வ ஆசிரியர்களைக்கொண்ட அமைப்பான, 'கல்வியாளர்கள் சங்கமம்' அமைப்பின் மூலமாக, சூரிய ஒளியில் இயங்கும் சோலார் தெருவிளக்குகளை அமைக்க முடிவுசெய்துள்ளோம். மாதிரிக்காக, தற்போது இரு சோலார் தெருவிளக்குகளை அமைத்துள்ளோம். புதுக்கோட்டை மாவட்டம் அணவயல், எல்.என்.புரம் கிராமம், தஞ்சாவூர் மாவட்டம் நாடியம் ஆகிய கிராமங்களைத் தேர்ந்தெடுத்து முன்மாதிரி கிராமமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.