`கோமாரி நோய் எதிரொலி!' - மாட்டுச்சந்தைக்குத் தடை விதித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் | Taking fast action for cowpox Disease Says Minister Udumalai Radhakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (04/12/2018)

கடைசி தொடர்பு:16:35 (04/12/2018)

`கோமாரி நோய் எதிரொலி!' - மாட்டுச்சந்தைக்குத் தடை விதித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

``15 நாள்களுக்குள் கோமாரி நோய் கட்டுப்படுத்தப்பட்டு, மாட்டுச் சந்தைகள் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என ஈரோட்டில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

கோமாரி நோய்


ஈரோடு மாவட்டம், சென்னிமலை மொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 593 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 22 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.


நிகழ்ச்சிக்குப் பின்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், `` கடந்த பதினைந்து நாள்களாக ஈரோடு மாவட்டத்தில் கோமாரி நோயின் தாக்கம் இருந்தது. கால்நடை பராமரிப்புத் துறையின் மூலமாக அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலே 85 மருத்துவக் குழுக்களை உருவாக்கி, அந்த மருத்துவக் குழு அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, இன்றைக்கு கோமாரி நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதேபோல திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கோமாரி நோய் கண்டறியப்பட்டவுடன், ஏறத்தாழ 50 மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு கால்நடைகளுக்கு கோமாரி நோயின் தாக்கம் குறைக்கப்பட்டு இன்று கட்டுக்குள் இருக்கிறது. கோமாரி நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மாட்டுச் சந்தையை 15 நாள்களுக்கு நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டிருக்கிறது. மாவட்ட கால்நடைத்துறை பராமரிப்பு இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் தலைமையில் கோமாரி நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து  நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் 6 பகுதிகளில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய பாலி கிளினிக்குகளை முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். கூடிய விரைவில் ஈரோடு, திருப்பூர் உட்பட 6 மாநகராட்சிகளில் கால்நடைகளுக்கான பாலி கிளினிக்குகள் அமைக்கப்படும்" என்றார்.

கோமாரி நோய்​​​​

`கோமாரி நோயால் உயிரிழந்த கால்நடைகளுக்கு விவசாயிகள் இழப்பீடு கேட்கிறார்களே?' என பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்ப, ``கோமாரி நோயால் எத்தனை மாடுகள் இறந்திருக்கின்றன என்கின்ற விவரங்களை நாங்கள் எடுத்து வருகிறோம். கூடிய விரைவில் முதலமைச்சருடன் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுப்போம். அதேபோல கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, 50,000 பேருக்கு 4 விலையில்லா ஆடுகளும், 15,000 பேருக்கு விலையில்லாத கறவைப் பசுக்களும், 50,000 பேருக்கு 50 நாட்டுக்கோழிகளையும் வழங்க வேண்டுமென முடிவு செய்து, அதற்காக கால்நடை பராமரிப்புத் துறைக்காக மட்டும் 150 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வேண்டுமென பிரதமரிடம் முதலமைச்சர் கேட்டிருக்கிறார். அந்த நிவாரணத் தொகை வந்தவுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``கோமாரி நோய் உள்ள மாட்டை, தெருவில் பிடித்துக்கொண்டு நடந்தால் கூட அது மற்ற கால்நடைகளுக்குப் பரவிவிடும். எனவேதான், மாட்டுச் சந்தைகளை நடத்த தற்காலிகமாக தடை விதித்திருக்கிறார்கள். அனைத்து மாவட்ட எல்லைகளிலும் கண்காணிப்பை தீவிரப் படுத்தியிருக்கிறோம். மாட்டை முழுவதுமாக பரிசோதனை செய்த பின்னரே மாவட்டங்களில் உள்நுழைய அனுமதிக்கிறோம். 15 நாள்களுக்குள் கோமாரி நோயைக் கட்டுப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன் மாட்டுச் சந்தைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.