`பெரிய அளவில் செய்வேன்; நம்பிக்கையோடு இருங்க!'- பேராவூரணி மக்களிடம் சசிகுமார் உருக்கம் | Actor sasikumar in Gaja cyclone affected areas

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (04/12/2018)

கடைசி தொடர்பு:17:05 (04/12/2018)

`பெரிய அளவில் செய்வேன்; நம்பிக்கையோடு இருங்க!'- பேராவூரணி மக்களிடம் சசிகுமார் உருக்கம்

``இரண்டு வாரம் கழிச்சு வந்து பார்க்கிறேன். என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியலை. உங்களால எப்படிம்மா தாங்கிக்கொள்ள முடிந்தது'' என இயக்குநரும் நடிகருமான சசிகுமார் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டதோடு கண் கலங்கியபடி அவர்களிடம் கேட்டது உருக்கத்தை ஏற்படுத்தியது.

பேராவூரணியில் சசிகுமார்

கஜா புயலால் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் போன்ற பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் மக்கள் வீடுகளை இழந்தும், வாழ்வாதாரத்தைத் தொலைத்தும் பரிதவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் பலர் தாமாக முன்வந்து வேண்டிய உதவிகளைச் செய்து வருகின்றனர். இதேபோல் நடிகர் சசிகுமார் பேராவூரணியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதோடு மக்களுக்கு நிவாரணப் பொருள்களும் வழங்கினார். அதோடு வீடு வீடாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் அன்போடு அணுகி ஆறுதலாக நாலு வார்த்தை பேசினார். இது விரக்தியில் இருந்த அப்பகுதி மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்டவரிடம் ஆறுதல் கூறும் சசிகுமார்

இது குறித்து பேசிய சிலர், ``நடிகர் சசிகுமார் பேராவூரணி அருகே உள்ள மிகவும் பாதிக்கப்பட்ட திருச்சிற்றம்பலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இரண்டு நாள்கள் தங்கி பார்வையிட்டார். அப்போது வீழ்ந்து கிடக்கும் வீடுகளையும், சாய்ந்து கிடக்கும் தென்னைகளையும் பார்த்து மனம் வெதும்பினார். பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நடந்தே சென்றதோடு ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடம் என்னாலேயே தாங்க முடியலையே. உங்களால எப்படியம்மா இதை தாங்கிக்கொள்ள முடியுது எனக் கண் கலங்கியபடி கேட்டவர், ஒரு வீட்டில் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாம உட்கார்ந்து விட்டார்.

பாதிக்கப்பட்ட தென்னையை பார்வையிடும் சசிகுமார்

அப்போது ஒரு பெண்,  நாங்க பிள்ளையாக வளர்த்த தென்னையும் போச்சு, வாழ்ந்த வீடும் போச்சு. இனி நாங்க என்ன செய்யப்போறோம் எனத் தெரியலை. இதில் இருந்து மீண்டு வர பல வருடம் ஆகும் என அழுதபடி கூறினார். அதற்கு சசிகுமார், `நான் மீண்டும் திரும்பி வருவேன். உங்களுக்கு நிச்சயமா பெரிய அளவில் செய்வேன். நம்பிக்கையோடு இருங்க' என்றார். பொருளாதார சிக்கலில் இருக்கும் சசிகுமார் எங்க பகுதிக்கு வந்து உதவி செய்ததோடு மீண்டும் வரேன் என நம்பிக்கை வார்த்தைகளைக் கூறிச் சென்றார். இவையே எங்களுக்குப் பால் வார்த்த மாதிரி இருக்கு'' என நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க