`தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம்!' - வைகோவை விமர்சித்த பொன்னார் | Pon.radhakrishnan slams vaiko

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (04/12/2018)

கடைசி தொடர்பு:17:20 (04/12/2018)

`தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம்!' - வைகோவை விமர்சித்த பொன்னார்

பொன்.ராதாகிருஷ்ணன்

`பிரதமரை தமிழகத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று வைகோ விடுத்துள்ள சவாலை எதிர்கொள்ள நாங்கள் தயார். தமிழகம் முழுவதும் பிரதமர் சுற்றுப் பயணம் செய்வதற்கு பிரதமர் வருவார்' எனக் கோவையில் பேட்டியளித்தார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். 

கோவை விமான நிலையத்தில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ``தி.மு.க-வில் தனக்கு எதிராக நடத்தப்பட்ட  சதிச் செயலைக் கண்டித்து தி.மு.க-விலிருந்து வெளியேறியவர்தான் வைகோ. சதிச்செயல் செய்தவர்களை அரசியலில் இருந்தே  ஓய்வுபெற வைத்து தமிழகத்தைக் காப்பற்றப்போகிறேன் என்று சபதமேற்று ம.தி.மு.க-வை அவர் உருவாக்கினார். ஆனால், இன்றைக்கு என்ன நிலை உருவாகியிருக்கிறது என்பது அவருக்குத்தான் தெரியும். வைகோ தன்னுடைய நிலைப்பாட்டை முழுமையாக மாற்றிகொண்டுள்ளார். எந்த தீயசக்திக்கு எதிராகப் போராடுவேன் எனத் தி.மு.க-விலிருந்து வெளியேறினாரோ அதே தீய சக்திக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதற்காகக் களத்தில் இறங்கியிருக்கிறார். இது வைகோ மீதான நம்பகத்தன்மையை  கேள்விக்குறியாக்கியிருக்கிறது. மிகப்பெரிய போராளியாகத் திகழும் வைகோ ஒரு சிலரை திருப்திப்படுத்தவும், தன் கட்சிக்கு அரசியல்ரீதியான ஆதாயத்தைத் தேடித் தரவும்தான் தமிழகத்தில் பிரதமரை அனுமதிக்க மாட்டோம்; கறுப்புக்கொடி காட்டுவோம் என்று  கூறியிருக்கிறார்.

வைகோ

வைகோவின் சவாலை நான் ஏற்கிறேன். பிரதமர் தமிழகத்துக்கு வருவார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார். தமிழகத்துக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் தருவார். எந்த விதமான போராட்டங்களையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். யாரையோ திருப்திப்படுத்த, யாரையோ அவமானப்படுத்தலாம் என்று தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று வைகோவைக் கேட்டுக்கொள்கிறேன். வைகோ யாரை முதல்வராக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அவரை திருப்திப்படுத்துவதற்காகத்தான் வைகோ இப்படிப் பேசி வருகிறார்.

தி.மு.க கூட்டம்

வைகோ முன்பு பேசிய பேச்சுகள் எல்லாம் ம.தி.மு.க-வினருக்கு பெருமை சேர்த்தது. இப்போது அவர் பேசுவதை ம.தி.மு.க தலைவர்களை தலைகுனிய வைத்துள்ளது. துரைமுருகன் கூட்டணி குறித்து எப்படிப் பேசினார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், எப்படியாவது ஒட்டிக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு ம.தி.மு.க தள்ளப்பட்டுள்ளது, வேடிக்கையாக இருக்கிறது. தி.மு.க-வில் இருக்கும் அத்தனை பேரும் ம.தி.மு.க தொண்டர்களை ஏளனமாகப் பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. வேண்டா விருந்தாளியாக வைகோ, தி.மு.க-வுக்குப் போகிறார். மேகதாது விவகாரத்தில் தமிழகத்துக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் எதுவும் நடக்காது. மேகதாது அணைக்கு நாங்களும் முழு எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டிருக்கிறோம். கஜா புயல் தொடர்பாக மத்தியக் குழுவின் ஆய்வு அறிக்கை இதுவரை கொடுக்கப்படவில்லை. பிரதமரின் ஒப்புதலின்பேரில் உள்துறை அமைச்சகம் இந்த நிதியை வழங்கியுள்ளது. அறிக்கை சமர்ப்பிக்கும் வரை கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க