வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (04/12/2018)

கடைசி தொடர்பு:17:35 (04/12/2018)

‘380 குடும்பங்களுக்கு 3 லட்சம் மதிப்புள்ள நிவாரணம்’- ராமேஸ்வரம் யாத்திரை பணியாளர் சங்கத்தினர் உதவி

கஜா புயல் தாக்குதலுக்கு உள்ளான புதுக்கோட்டை பகுதி கிராம மக்களுக்கு ராமேஸ்வரம் யாத்திரை பணியாளர் சங்கத்தினர் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நிவாரண உதவிப் பொருள்களை அனுப்பியுள்ளனர்.

கஜா புயல்


 

தமிழகத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி நள்ளிரவு வீசிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இழப்புகளை ஈடு செய்ய பல ஆண்டுகள் என்ற நிலையில், அன்றாட அடிப்படைத் தேவைகளுக்காக இங்குள்ள மக்கள் கையேந்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, குடிநீர் போன்றவற்றை மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு கட்சிகள், சமூக நல அமைப்புகள், தனிநபர்கள் வழங்கி வருவதன் மூலம் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
 

ராமேஸ்வரத்தில் உள்ள அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்கத்தினரும் இந்த நிவாரணப் பணிகளில் பங்கெடுத்து உள்ளனர். இந்த சங்கத்தின் மூலம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பாக ரூ.1.8 லட்சம் பெறுமான நிவாரண பொருள்களை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் வழங்கினர். இன்று 2-ம் கட்டமாக ரூ.2.8 லட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள், பேட்டரி விளக்குகள் ஆகியவற்றைப் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூமேழி, கார்மலை, பிராந்தியக்கரை ஆகிய கிராமங்களில் உள்ள 380 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக எடுத்துச் சென்றனர். யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமையில் செல்லும் இந்த நிவாரண வாகனத்தை ராமேஸ்வரம் தனி வட்டாட்சியர் அப்துல் ஜபார், டி.எஸ்.பி மகேஷ் ஆகியோர் கொடி அசைத்து அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகள் காளிதாஸ், மலைச்சாமி, ரவி, முனியசாமி, கண்ணன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.