``நேற்று எதிர்ப்பாளர்கள்; இன்று ஆதரவாளர்கள்!” - ஸ்டெர்லைட்டுக்காக குவியும் மனுக்கள் | Petitions by people for sterlite

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (04/12/2018)

கடைசி தொடர்பு:17:50 (04/12/2018)

``நேற்று எதிர்ப்பாளர்கள்; இன்று ஆதரவாளர்கள்!” - ஸ்டெர்லைட்டுக்காக குவியும் மனுக்கள்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட சட்டமன்றத்தில் சிறப்புச்சட்டம் இயற்ற வலியுறுத்தி நேற்று மக்கள் மனு அளிக்கப்பட்ட நிலையில், ஆலை மூடப்பட்டாதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகக் கூறி கிராம மக்கள், பல்வேறு அமைப்பினர் என 800-க்கும் மேற்பட்டோர் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு மனு அளித்தனர். 

பதாகையுடன் மக்கள்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே 28-ம் தேதி நிரந்தரமாக மூடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. இதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், ஆலையின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்திட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது தீர்ப்பாயம். ``ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தவறு” என அக்குழு அறிக்கையைத் தாக்கல் செய்தது. 

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மனு

இந்தக் குழுவின் ஆய்வறிக்கையை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தியும் நேற்று (3.12.18)  ஸ்டெர்லைட் எதிர்ப்பு தமிழர்கள் கூட்டமைப்பு, பண்டாரம்பட்டி, தெற்கு வீரபண்டியாபுரம், குமரெட்டியாபுரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை சரக டி.ஐ.ஜி., கபில்குமார் சரத்கர் மற்றும் மாவட்ட எஸ்.பி., முரளிரம்பா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகம் காலை முதல் மாலை வரை பரபரப்பாகவே காணப்பட்டது.

இந்த நிலையில், இன்று (4.12.18) ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் போதிய தொழில் இன்றி, தங்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஆலையை திறக்க வலியுறுத்தி தெற்கு வீரபாண்டியாபுரம், காயலூரணி, மீளவிட்டான், குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, முக்காணி, கோரம்பள்ளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் என 800-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனுக்கொடுக்க வந்த பொதுமக்கள்

இது குறித்து பேசிய மக்கள், ``தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்து வந்தோம். இந்த நிலையில் ஆலை திடீரென மூடப்பட்டதால், வேறு தொழில் வாய்ப்பு ஏதும் இல்லாமல் வருமானம் இல்லாமல் தவித்து வருகிறோம். இதுவரை பெற்ற கடன்களைக்கூட அடைக்க முடியாமல் தவித்து வருகிறோம். எனவே, எங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் கேட்டுக் கொள்கிறோம்” என்றனர். தொடர்ந்து ஆலையைத் திறக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க