வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (04/12/2018)

கடைசி தொடர்பு:16:01 (04/12/2018)

`எனது கடைசிப் படம் இதுதான்’ - கேரளாவில் கலங்கிய கமல்

தமிழக மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த மதச்சார்பற்ற கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கமல்

PhotoCredits : Twitter/@pendown

கேரளாவைச் சேர்ந்த டிவென்டி20 (Twenty20) என்ற அமைப்பு ‘கடவுள் இல்லம்’ என்ற திட்டத்தின் கீழ், எர்ணாகுளம் மாவட்டத்தில் நிஜரால்லூர் என்ற பகுதியில் உள்ள ஒரு காலனியில் சிதிலமடைந்த வீடுகளைப் புனரமைத்து கட்டித்தந்துள்ளது. அந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 37 பயனாளர்களுக்கு புதிய வீடு கட்டப்பட்டுள்ளது. பயனாளர்களுக்கு வீடு வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு வீட்டுக்கான சாவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “அரசியல் என்பது ஓர் அர்ப்பணிப்பு. அது தொழில் அல்ல. நானும் டிவென்டி20 தலைமை ஒருங்கிணைப்பாளர் சபு ஜகோபும் இணைந்து அரசியலில் ஒரு புது மாற்றத்தைக் கொண்டுவருவோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். என் அரசியல் பயணம் பணத்துக்கானது அல்ல. அது மக்களுக்கானது மட்டுமே. தமிழக மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த மதச்சார்பற்ற கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும்.  ‘கடவுள் இல்லம்’ மிகச் சிறந்த ஒரு திட்டம். 

சபரிமலை மற்றும் மீ டூ (Me too) போன்ற விவகாரங்களில் மாற்றங்கள் ஒரே இரவில் நிகழ்ந்துவிடாது. நம் நடைமுறைகளில் மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலமே அது சாத்தியமாகும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் சங்கர் இயக்கத்தில் நான் நடிக்கவிருக்கும் இந்தியன் - 2 படமே எனது கடைசிப் படமாக இருக்கும். அதன் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து எனது முழுக் கவனமும் அரசியலில் மட்டுமே இருக்கும்” எனப் பேசியுள்ளார். 

1996- ம் ஆண்டு வெளிவந்த `இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம், `இந்தியன் 2' என்ற பெயரில் உருவாகவுள்ளது. சங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இந்தியன் - 2 படத்தில் கமல் நடிக்க உள்ளதாக, அவரது பிறந்தநாள் அன்று அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகின.