`நம்புங்க, நான் குன்னக்குடி வைத்தியநாதனின் பேத்தி இல்லை?’- மனம் திறக்கும் சிஷ்யை! | I am not granddaughter of kunnakudi vaidyanathan, says violinist balambal

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (04/12/2018)

கடைசி தொடர்பு:16:15 (04/12/2018)

`நம்புங்க, நான் குன்னக்குடி வைத்தியநாதனின் பேத்தி இல்லை?’- மனம் திறக்கும் சிஷ்யை!

குன்னக்குடி வைத்தியநாதன்

யலின் என்றாலே நம் நினைவுக்குச் சட்டென வருபவர் பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன்தான். நெற்றி நிறைய விபூதிப் பட்டை, வட்ட வடிவிலான குங்குமப்பொட்டு சகிதம் தெய்வகடாட்சமாக காட்சி தருபவர். அவர் தம் திருக்கரங்கள் கொண்டு வயலின் வாசித்தால் மனமுருகிக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். 

சமீபத்தில் குன்னக்குடி வைத்தியநாதனின் வயலின் இசையை தன் வயலினில் வாசித்துக்காட்டிய பெண்ணின் வீடியோ வைரலானது. மங்களகரமாக இருந்த அந்தப் பெண்தான் குன்னக்குடி வைத்தியநாதனின் பேத்தி என்கிற செய்தியோடு அதிகம் பகிரப்பட்டது. அதுமட்டுமல்ல, அந்தப் பெண்ணும் வயலினைக் கையில் பிடித்து வாசிப்பது, அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்து புன்னகைப்பது என முக பாவனைகளில் அப்படியே குன்னக்குடி வைத்தியநாதனை நினைவுக்குக் கொண்டு வருகிறார்.

குன்னக்குடி வைத்தியநாதனின் சிஷ்யை பாலாம்பாள்

அவர் உண்மையிலேயே குன்னக்குடி வைத்தியநாதனின் பேத்திதானா என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் அவரைத் தேடத் தொடங்கினோம். தொலைபேசியில் அவர் தொடர்பு எண்ணைப் பிடித்துப் பேசியபோது, ``வணக்கம்ங்க, என் பேரு பாலாம்பாள். நான் ஒரு வயலின் கலைஞர். சென்னையில்தான் வசிக்கிறேன். அதோடு, நான் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுடைய பேத்தி இல்லை. யாரோ ஒருவர் நான்தான் அவருடைய பேத்தி என்று அறிமுகப்படுத்தி யூடியூபில் நான் வயலின் வாசிக்கும் வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார். எனக்குத் தெரிந்து நானும் பலரிடம், நான் குன்னக்குடி ஐயாவின் பேத்தி இல்லை என்று சொல்லிவிட்டேன். வீடியோவுக்குக் கீழே கமென்ட்டும் கொடுக்கிறேன். ஆனாலும், அந்த வீடியோவை அதிகம் பேர் பகிர்ந்துகொண்டேதான் இருக்கிறார்கள். எல்லோரிடமும் போய் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது இல்லையா.

குன்னக்குடி வைத்தியநாதன்

ஆனால், இதில் ஒரு உண்மை இருக்கிறது. நான் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுடைய சீடர். அவர் என்னை தன் பேத்தியைப் போலத்தான் நடத்தினார். அதை வைத்து நான் அவருடைய பிரதான சீடர் என்று சொல்லிக்கொள்ளலாம். மற்றபடி அந்தச் செய்தி புரளி'' என்று முற்றுப்புள்ளி வைத்தார் பாலாம்பாள்.