` புல் முளைக்கவே வழியில்லை; தாமரை எப்படி மலரும்!' - திருச்சி கூட்டத்தில் தகித்த ஸ்டாலின் | DMK, alliance parties staged protest in trichy

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:18:00 (04/12/2018)

` புல் முளைக்கவே வழியில்லை; தாமரை எப்படி மலரும்!' - திருச்சி கூட்டத்தில் தகித்த ஸ்டாலின்

``தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு, எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழகத்தில் தாமரை மலரும். இங்க `புல்'லே வளரவில்லை. 'புல்'லுக்கே வக்கில்ல. தாமரை மலருமா" என்று திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாகப் பேசினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின்

காவிரி ஆற்றில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க தலைமையில்  அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ம.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டன. கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கி.வீரமணி, வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர் மொய்தீன், அப்துல்சமது உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான தி.மு.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் திரண்டு வந்தனர். இதனால் திருச்சி மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போராடுவோம்! உரிமையை நிலைநாட்டும் வரை போராடுவோம்! மோடி இந்தியாவின் பிரதமரா, கர்நாடகாவின் முதல்வரா, அனுமதியோம், மேகதாது அணைக் கட்ட அனுமதியோம், அரசியலமைப்பு சட்டத்தைக் காப்போம் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், ``காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அனுமதி பெறாமல், உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு உள்ள நிலையில், அரசியல் காரணங்களுக்காக மத்திய பா.ஜ.க அரசு மேகதாது அணை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. நாங்கள் தி.மு.க-வுடன் உள்ள தோழமைக் கட்சிகளின் பிணைப்பை எந்தக் கட்சியாலும் சிதறடிக்க முடியாது'' என்று கூறினார்.

முழக்கமிடும் கூட்டணி கட்சியினர்

அதைவிட ஒருபடி மேலேபோன முத்தரசன், ``கடந்த சில வருடங்களாகத் தமிழகம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, மத்திய அரசு தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. இதற்கெல்லாம், மத்தியிலும் தமிழகத்திலும் அரசியல் மாற்றம் ஏற்பட்டால்தான் பிரச்னை தீரும். அதனால்  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக மக்கள் அணி திரள வேண்டும். கஜா புயலால் 12 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு மிகவும் சொற்ப தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது. அதுமட்டுமல்லாமல் கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டுவரும் சூழலில், இன்னமும் மக்களுக்கு அரசின் நிவாரணம் கிடைக்காமல் தவிக்கின்றனர். இந்நிலையில் காவிரியின் குறிக்கே, மேகதாது அணை திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. காவிரியில் தண்ணீரை முழுமையாக நிறுத்த கர்நாடக அரசு தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. இன்றைக்கு நடக்கும் ஆர்ப்பாட்டம் மேகதாது பிரச்னைக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்னைகளுக்காகவும்தான். இதற்கு நிரந்தர தீர்வு மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதுதான். எங்களின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்தான். அப்படி எடப்பாடியால் சொல்ல முடியுமா" என்றார்.

கூட்டணி கட்சியினர்

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``நாம் மேற்கொள்ளும் போராட்டம் அரசியலுக்காக அல்ல. உழவர் கண்ணீரை துடைப்பதற்கான போராட்டம். மேகதாது அணை பற்றி முதல் அறிவிப்பு வந்தபோதே தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது. காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கிய பிறகு, அதற்கு எதிராக மேல்முறையீட்டுக்குச் சென்ற மத்திய அரசு, நயவஞ்சகமாக அணைக் கட்ட அனுமதி வழங்கியுள்ளது. காவிரி ஆற்றில் மேகதாது அணைக் கட்ட முயல்வதற்கு எதிராக ஜெயலலிதா, ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அரசுகளால் தடை உத்தரவைக்கூட பெற முடியவில்லை. அப்படி இடைக்காலத் தடை உத்தரவு பெற்றிருந்தால் மேகதாது அணை கட்ட கர்நாடகம் துணிந்து இருக்காது. மேகதாது அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு எதிர்க்காமல் தூங்குகிறது. கர்நாடக அரசின் அணை திட்டத்துக்கு அனுமதி கிடைத்ததற்கு முழு காரணம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுதான். மேகதாது அணை பிரச்னை பற்றி விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். மத்திய பா.ஜ.க அரசைப் பொறுத்தவரையில் தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. அதற்கு உதாரணமாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டுவர 20வருடங்களுக்கு மேல் ஆகும். இது இயற்கை சதி. கஜா புயலால் இயற்கை பேரழிவால் டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசோ மேகதாது அணையைக் கட்டி செயற்கையாகப் பாதிப்பை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.

திருச்சியில் பங்கேற்றவர்கள்

கஜா புயல் மாதிரி வேறு எந்த மாநிலத்திலாவது பேரிடர் ஏற்பட்டிருந்தால் மோடி வெளிநாடு போயிருப்பாரா. அவர் ஏன் தமிழகத்துக்கு இன்னும் வரவில்லை. வேறு மாநிலம் இதுபோல் பாதிக்கப்பட்டிருந்திருந்தால் ஆயிரக்கணக்கான கோடி வழங்கப்பட்டிருக்கும். சரி, கஜா புயலுக்காக எதிர்பார்த்த தொகையை மத்திய அரசு வழங்கி இருக்கிறதா, இல்லையே. சொற்ப தொகையை வழங்கி தமிழகத்தை வஞ்சித்துள்ளது. அப்படியிருக்கையில், எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழகத்தில் தாமரை மலரும். இங்க 'புல்'லே வளரவில்லை. 'புல்'லுக்கே வக்கில்ல... தாமரை மலருமா. இதே காவிரி பிரச்னையை மையமாக வைத்து நாம் நடத்திய போராட்டத்தின் காரணமாக தமிழகம் வந்த பிரதமர், சாலை வழியாகப் பயணிக்காமல் விமானத்திலேயே பறந்தார். இப்போது மேகதாது அணையைக் கொண்டுவந்து தமிழகத்தை வஞ்சிக்க நினைத்தால், தமிழக மக்களைக் காப்பாற்றுவதற்கு நல்ல முடிவை எடுத்து அறிவிக்காவிட்டால், வைகோ, கி.வீரமணி சொன்னதைப்போல, மோடி எந்தச் சூழ்நிலையிலும் தமிழகத்துக்கு வர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என்பதை வழிமொழிகிறேன்" என்றார்.