` வீடியோ வெளியாகியும் நடவடிக்கை இல்லை!' - மணல் கொள்ளைக்கு எதிராகக் கொதிக்கும் மக்கள் | Government officials help illegal sand mining, alleges karur people

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (04/12/2018)

கடைசி தொடர்பு:18:20 (04/12/2018)

` வீடியோ வெளியாகியும் நடவடிக்கை இல்லை!' - மணல் கொள்ளைக்கு எதிராகக் கொதிக்கும் மக்கள்

``வருவாய்த்துறை அதிகாரிகள் துணையோடு ஆற்றில் மணல் கொள்ளை நடக்கிறது. தடுப்பார் யாருமில்லை" என்று அல்லல்படுகிறார்கள் பகுதி மக்கள்.

புங்காற்றில் மணல் கொள்ளை

இயற்கையை அதன்போக்கில் வாழவிட்டால், இயற்கை நம்மை வாழவைக்கும் என்பது முதுமொழி. ஆனால், நாளுக்கு நாள் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பது தொடர்கதையாகி இருக்கிறது. குறிப்பாக, கரூர் குளித்தலை காவிரி ஆற்றில் மணல் கொள்ளை உலக அளவில் பெயர்போகும் அளவுக்கு நடக்கிறது. சமீபத்தில்கூட இரு நாள்களுக்கு முன் குளித்தலையில் மணல் குவாரி அமைப்பதை எதிர்த்து காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் கடையடைப்புச் செய்தனர். இந்நிலையில், ``கடவூர் உள்மகாணத்தில் உள்ளூர் அரசியல் தலைகள் உதவியோடு சிறு சிறு ஆற்றில் உள்ள மணலை வழிச்சு அள்ளிவிட்டார்கள். அதிகாரிகள் துணையோடு ஜாம் ஜாம் என்று மணல் கொள்ளை நடக்கிறது" என்று பகுதி மக்கள் குமுறுகிறார்கள்.

மணல் கொள்ளை நடக்கும் இடத்தில் நின்றவர்கள்

இதுபற்றி நம்மிடம் பேசிய மக்கள், ``உள்ளூர் அரசியல்வாதிகள் தடுப்பணை, பள்ளி சுற்றுச்சுவர், அரசுப்பள்ளி கூடுதல் கட்டடம் என டெண்டர் எடுத்துள்ளனர். இவற்றுக்கு மணல் காசு கொடுத்து வாங்கினால் விலை அதிகம். அதனால், ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். சில தினங்களுக்கு முன்பு ராஜப்பட்டி அருகே புங்காற்றில் மணல் கொள்ளை அதிகாரிகள் தாசில்தார், வி.ஏ.ஓ உதவியோடு நடந்து இருக்கிறது. அதைத் தடுக்க வேண்டிய அதிகாரிகளே மணல் கொள்ளைக்குத் துணைபோயிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள தி.மு.க முக்கிய பிரமுகர் ஒருவர் அதிகாரிகளின் உதவியோடு கடவூரில் தடுப்பணை, சுற்றுச்சுவர் எனப் பல கட்டடங்களைக் கட்ட கான்ட்ராக்ட் எடுத்துள்ளார். இவரின் துணையோடு இங்கு மட்டுமல்ல பல பகுதிகளில் அத்துமீறி மணல் எடுக்கிறார்கள்.

ஏற்கெனவே வானம்பார்த்த பூமி கடவூர். அதோடு நிலத்தடி நீர் பல அடிக்குக் கீழே போயிட்டு. 'இங்கே மணல் அள்ளினால் விவசாயம் பாதிக்கப்படும்'னு பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தோம். ஆனா யாரும் தட்டிக் கேக்கலை. பலமுறை கடவூர் வி.ஏ.ஓ கிட்ட புகார் கொடுத்தோம். ஆனா, இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டு காற்றோடு விட்டுவிட்டார். தாசில்தார்கிட்ட போன் பண்ணி சொன்னா, இடத்த விசாரிக்கிறாங்க. 'கடவூர்'னு சொன்னா, வரமாட்டேங்குறாங்க. 'மணல் கொள்ளையில் ஈடுபட வேண்டாம்'ன்னு பலமுறை அந்தத் தி.மு.க பிரமுகரிடமும் அவரின் உதவியாளரிடமும் சொன்னோம். ஆனா, அவர் கேட்கவே இல்லை. இங்கு நடந்த மணல் கொள்ளைப் பற்றி ரகசியமா வீடியோ எடுத்து அதை, சமூக வலைதளங்களில் வெளியிட்டோம். அந்த வீடியோ வைரலானது. ஆனா, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குறாங்க. தொடர்ந்து இங்கு மணல் கொள்ளை போறது கவலையா இருக்கு. கரூர் மாவட்ட நிர்வாகமாவது கடுமையா நடவடிக்கை எடுக்கணும்" என்றார்கள்.