வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (04/12/2018)

கடைசி தொடர்பு:17:44 (04/12/2018)

`காயத்ரி ரகுராம் பகிர்ந்த அந்த போட்டோ என்னை வருத்தப்படவெச்சது!' - தமிழிசையின் ஸ்டேட்மென்ட் #VikatanExclusive

தமிழிசை

பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தொடர்ந்து விமர்சனங்களை வீசி வருகிறார். சமீபத்தில் காயத்ரி ரகுராம் `Drunk and Drive' புகாரில் போலீஸில் சிக்கியதாகச் செய்திகள் வெளியாகின.  `நான் அன்று இரவு ஆல்கஹால் குடிக்கவில்லை. ஜலதோஷம் பிடித்ததால் சிரப் குடித்தேன். அதனால் ஆல்கஹால் சோதனையில் பாசிடிவ் வந்திருக்கலாம். என்னைப் பற்றி அவதூறு செய்தி பரப்படுகிறது. பா.ஜ.க-வில் என் வளர்ச்சி பிடிக்காத சிலர் இப்படிச் செய்கிறார்கள்’ என்று விளக்கம் கொடுத்தார். 

தமிழிசை

தமிழிசையிடம் இந்த விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, `காயத்ரி ரகுராம் பா.ஜ.க-விலேயே இல்லை’ என்று பதிலளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த காயத்ரி,  `தமிழிசை மேடம் நான் பாரதிய ஜனதாவின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது ஒரு கணினி மூலமாக. நீங்களாக யாரையும் கட்சியில் சேர்க்கவோ நீக்கவோ முடியாது. இது ஒரு தேசியக் கட்சி. உங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்று ட்வீட் தட்டினார். போதாதென்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்  `தமிழிசையை பா.ஜ.க தலைவர் பதவியில் இருந்து நீக்கினால்தான் கட்சி முன்னேறும்’ என்று கருத்து தெரிவித்தார். காயத்ரி ரகுராமின் இந்தக் கருத்துக்கு இணையத்தில் கண்டனங்கள் குவிந்தன. தமிழிசைக்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இதுகுறித்து தமிழிசையைத் தொடர்புகொண்டு பேசினோம். கலகலப்பாக பேசி அவர் கொடுத்த விளக்கம் பின்வருமாறு..  

 

தமிழிசை



``நான் ஒரு தேசிய கட்சியின் தலைவர். எல்லா தலைவர்களின் அங்கீகாரத்தையும் பெற்ற ஒரு தலைவர். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவங்க கிடையாது. எங்க குடும்பம் மிகப்பெரிய அரசியல் குடும்பம். எங்க தாத்தா இரண்டுபேரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். நான் வெளிநாட்டில் மிகப்பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டு, நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு பணியாற்றி வருகிறேன். என் இலக்கு தெளிவானது. அதனால்தான் என்னைப் பற்றிவரும் மீம்ஸ் பத்திலாம் நான் கவலப்பட்றது கிடையாது. என்னை விமர்சிச்சு எழுதறவங்க பத்தியும் நான் கவலைப் படல.

மக்களுக்கு சேவை செய்யணும். அவ்வளவுதான். மக்கள் பிரதிநிதியாகும் வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கல. எனக்கு கிடைச்சிருந்தா நான் எப்படிப்பட்ட தலைவர் ஆகியிருப்பேன்னு அனைவருக்கும் தெரிஞ்சிருக்கும். இப்போக்கூட மக்கள் சந்திப்புக்குதான் கிளம்பிக்கிட்டு இருக்கேன். நான் எம்.எல்.ஏ கிடையாது. ஆனா மக்களை சந்திப்பது என் கடமை. எல்லா செவ்வாய்க்கிழமையும் மக்கள் சந்திப்பு நடத்துறேன். 40-50 சாமானிய மக்கள் எங்களிடம் தேவையான உதவிகளை கேட்பாங்க. மக்கள் பிரதிநிதியா பொறுப்பில் இருப்பவங்கக்கூட இப்படி சந்திப்பு நடத்தல. என்னோட கெட்ட நேரம் மக்கள் பிரதிநிதியாகும் வாய்ப்பு இதுவர எனக்கு கிடைக்கல.

தமிழிசை

புயல் பாதித்த பகுதிகள்ல என்னால முடிஞ்ச அளவுக்கு உதவினேன். நான் சென்ற கிராமங்கள்ல குழந்தைகள் வாந்தி பேதி என பாதிக்கப்பட்டிருந்தாங்க. பால் பவுடர்கூட வாங்க முடியாம அவங்க பெற்றோர் தவிச்சாங்க. நான் அங்க இருந்த 5 நாள்களும் என்னால முடிஞ்ச மருத்துவ உதவிகள செஞ்சேன். அந்த மக்களோட தான் தங்கினேன், சாப்பிட்டேன். என்ன எப்பவுமே மீம்ஸ் போட்டு கேலி பண்றவங்ககூட என்னோட செயல்பாட்டை பாராட்டி மீம்ஸ் போட்டிருந்தாங்க. இதெல்லாம் ஏன் சொல்றேன்னா, என்னோட கொள்கையே வேற. காயத்ரி ரகுராம் சொல்லி தலைவர மாத்துற அளவுக்கு பா.ஜ.க இல்லை. இவங்களால வர்ற சலசலப்பு எல்லாம் நான் கண்டுக்க மாட்டேன். பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் தெரியும் என்ன பத்தி. 

தமிழிசை
 

காயத்ரி ரகுராம் ட்விட்டர் பக்கத்த பாருங்கன்னு என்னிடம்வந்து சில பேர் சொன்னாங்க. நானும் பார்த்தேன். என்ன பத்தி எழுதியிருந்ததுகூட எனக்கு பெரிசா தெரியல. அவங்க அப்பா படத்தை போட்டு, `மிஸ் யூ பா’ ந்னு எழுதியிருந்தாங்க. அது என்ன ரொம்ப வருத்தப்பட வெச்சது. நான் எப்பவுமே மனிதாபிமானம் உள்ள மருத்துவரா தான் வாழ்ந்துட்டு இருக்கேன். என்னை திட்டியிருந்த ட்வீட் எதுவுமே என் கண்ணுல படல. எனக்கு என்ன தோணுச்சு தெரியுமா. ஒரு தந்தை இழந்த பெண், ஏதோ மன வேதனையில் பேசுறாங்க. அவங்க மன அழுத்தத்தில் இருங்காங்கன்னு தோணுச்சு. அதோட அவங்க என்ன திட்டினது பத்தியெல்லாம் நான் பெருசா எடுத்துக்கல. 

காயத்ரி ரகுராம்
 

நான் ரொம்ப வலிமையான நபர். அவங்களோட விமர்சனங்கள் என்னை பாதிக்காது. காயத்ரி ட்வீட் கீழ என்ன நிறைய பேர் கிண்டல் பண்ணி கமென்ட் பண்ணியிருந்தாங்க. நான் எதையும் கண்டுக்கல. காயத்ரி என்னிடம் வந்து நான் மனக்கஷ்டத்துல இருக்கேன்னு சொல்லியிருந்தா நானே ஆறுதல் கூறியிருப்பேன். என்கிட்ட அவங்களுக்கு என்ன பிரச்னை என்று சகோதரியா நினைத்து சொல்லியிருந்தா நான் அதற்கான தீர்வை சொல்லியிருப்பேன்.  ஆனா, அவங்க எனக்கு அதிகாரம் இல்லை அப்படி இப்படின்னு பேசினது தவறு.  குடித்துவிட்டு வண்டி ஓட்டினதாக அவங்கள பத்தி செய்தி பரவுவதற்கு பா.ஜ.க உட்கட்சி பூசல் காரணம்ன்னு சொல்வதையும் ஏத்துக்க முடியாது.

காயத்ரி ஒருவாட்டி என்னிடம் வந்து, `நான் கட்சியில இருந்து விலகி இருக்கேன். இல்லாட்டி பிக்பாஸில் கலந்துக்க முடியாதுன்னு சொன்னாங்க. நானும் சரின்னு சொன்னேன். இப்போ அவங்க எனக்கு கட்சியில அதிகாரம் இல்லன்னு சொல்றாங்க. நான் பா.ஜ.க மாநிலத் தலைவர். அதற்கான முழு அதிகாரம் எனக்கு இருக்கு. அவங்க இளைஞர் அணிதான். அந்த அணிக்கான உறுப்பினர்களை பரிந்துரை செய்வதே நாங்கதான். அவங்க  செயற்குழு உறுப்பினரா இருந்தாங்க. மேலும், எங்க கட்சியோட விதிமுறைகளின்படி  உறுப்பினர்கள் ஆக்டிவ்வாக இல்லை என்றாலோ, மூன்றுமுறை தொடர்ந்து செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றாலோ, அவங்க உறுப்பினர் எண் தானாகவே காலாவதியாகிவிடும். நான் அவங்கள நீக்கவே வேணாம். கட்சியின் விதிப்படி அவங்க கட்சியில இல்ல. அவங்க சமீபத்துல போலீஸில் பிடிபட்டது பத்திக்கூட எனக்குத் தெரியாது. அவங்களுக்கு இப்பவும் உதவி பண்ண நான் ரெடியாதான் இருக்கேன். 

தமிழிசை
 

ஒரு சவாலான சூழல்ல ஒரு பெண் தலைவரா இத்தனை நாள் இருக்குறதே பெரிய விஷயம். அதற்கு காரணம் அரசியல் களத்துல 24 மணி நேரமும் நான் போடுற உழைப்புதான். சுற்றுப்பயணம், மக்கள் சந்திப்புன்னு  நான் பரபரப்பா இயங்கிகிட்டுதான் இருக்கேன். இரவு நேரத்தில்கூட சமூக பிரச்னைகள் பத்தி ட்வீட் செய்வேன். ஒரு காயத்ரி ரகுராம் என்னை சலசலப்படைய வைக்க முடியாது. அரசியல்ல சில முட்கள் குத்தலாம், கற்கள் இடறல் உண்டாக்கலாம். என் நோக்கத்துல நான் தெளிவா இருக்கேன். நாடாளுமன்றத் தேர்தல்களத்தைச் சந்திக்கத் தயாரா இருக்கேன். மக்கள் பிரதிநிதி ஆகணும். இதுதான் என் குறிக்கோள்’ என்று முடித்தார்.

சொல்ல வரும் கருத்தை பன்ச் டயலாக்காக சொல்வது தமிழிசையின் தனிச்சிறப்பு. எனவே, அவரிடம் பன்ச் டயலாக் சொல்லாமல் உங்களை விடப்போவதில்லை என்றோம்.. உடனே அவர் சிரித்துவிட்டு..  “காயத்ரி.. பாவம் என்ன காயத்தில் இருக்கிறாரோ..” என்றார். 

காயத்ரி ரகுராமின் விமர்சனங்கள் தமிழிசையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பது அவர் பேச்சில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. தமிழிசையின் அரசியல் அனுபவமும் பக்குவமும் காயத்ரி ரகுராமுக்கு சிம்ம சொப்பனம்தான். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க