வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (04/12/2018)

கடைசி தொடர்பு:17:39 (04/12/2018)

யார் இந்த சஞ்சீவ்? - ரகசிய கேமரா சர்ச்சையில் சிக்கிய பின்னணி 

சஞ்சீவ்

சென்னை ஆதம்பாக்கத்தில் பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா சர்ச்சையில் சிக்கிய சஞ்சீவ் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

சென்னை ஆதம்பாக்கத்தில் செயல்பட்ட பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை நடத்திய திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவ்வை போலீஸார் கைது செய்துள்ளனர். ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள தகவல் கிடைத்ததும் விடுதிக்குள் நுழைந்த போலீஸார் ரகசிய கேமராக்கள், சில ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். அதுதொடர்பாக சஞ்சீவ்விடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

யார் இந்த சஞ்சீவ்?. 

சஞ்சீவ்வின் சொந்த ஊர் திருச்சி. இவர் தாம்பரத்தில் குடும்பத்துடன் குடியிருந்துவருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசும் சஞ்சீவ், பார்ப்பதற்கு சினிமா ஸ்டார் போல ஸ்டைலாக இருக்கிறார். எப்போதும், பந்தாவாகவே வலம் வரும் அவர், விடுதியில் தங்கியிருப்பவர்களிடம் அன்பாகப் பேசுவார். ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஹைடெக்காக பெண்கள் விடுதி ஒன்றை நடத்தினார். அந்த விடுதியில் அனைத்து வசதிகளும் இருந்தன.

இதனால் ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள்தான் அதிகளவில் தங்கியிருந்தனர். விடுதிக்குள் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டில் சஞ்சீவ்வை போலீஸார் கைது செய்துள்ளனர். சஞ்சீவ் மீது 2011-ம் ஆண்டு முதல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. விடுதியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், சஞ்சீவ்வின் பெயர்களில் உள்ளன. அந்த ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அந்த ஆவணங்களை சஞ்சீவுக்கு தயாரித்து கொடுத்தது யார் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

சஞ்சீவ் நடத்திய விடுதி

ரகசிய கேமராக்கள் 

ஹைடெக் வசதியுள்ள விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டது ஏன் என்று சஞ்சீவ்விடம் போலீஸார் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்துள்ளார். ரகசிய கேமரா பொருத்தப்பட்டதற்கான நோக்கம் என்ன என்று சஞ்சீவ்விடம் விசாரித்தபோது அவர் எந்தப்பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார். தற்போது போலீஸாரிடம் கிடைத்த கேமராவில் குறிப்பிடும் வகையில் எந்த வீடியோக்களும் இல்லை. இருப்பினும் அடிக்கடி சர்வீஸ் என்ற பெயரில் ரகசிய கேமராக்களை சஞ்சீவ் மாற்றியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாகவும் விசாரணை நடந்துவருகிறது. 

ரகசிய கேமரா விவகாரத்தில் சஞ்சீவ்வைத் தவிர்த்து இன்னும் சிலர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் யார், யார் என்ற விசாரணையில் போலீஸார் களமிறங்கியுள்ளனர். சஞ்சீவ்வின் பின்னணி குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதுதொடர்பாகவும் விசாரணை நடந்துவருகிறது. இந்தக் கேமராக்கள் எப்போது விடுதியில் பொருத்தப்பட்டன என்று விசாரணை நடந்துவருகிறது. கேமராவில் பதிவான வீடியோக்கள் எங்கே என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

சஞ்சீவ் நடத்திய விடுதி

அடிக்கடி கார்கள் வரும் 

பரங்கிமலை ரயில் நிலையம் அருகிலேயே இந்த விடுதி செயல்பட்டதால் தங்கியிருக்கும் பெண்களுக்கு போக்குவரத்துக்கு எந்தவித சிரமமும் இல்லை. ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களை அழைத்துச் செல்ல கார்கள் அடிக்கடி வரும் என்கின்றனர் அப்பகுதி மக்கள். ஆனால், அது பெண்கள் விடுதியா என்பது இப்போதுதான் அப்பகுதி மக்களுக்கு தெரியவந்துள்ளது. அதிலும் ரகசிய கேமராக்கள் பொருத்திய விவகாரம் தில்லைகங்கா நகர் பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. 

இந்தச் சம்பவத்துக்குப்பிறகு விடுதியில் தங்கியிருந்த பெண்கள் வெளியேறிவிட்டனர். இதனால் விடுதிக்கு பூட்டுபோடப்பட்டுள்ளது. வீடியோ விவகாரத்தால் விடுதியில் தங்கியிருந்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். ரகசிய கேமராவில் பதிவான வீடியோக்களை சஞ்சீவ் என்ன செய்தார் என்பதே போலீஸாரின் முக்கிய கேள்வியாக உள்ளது. ஆனால், அதற்கு அவர் தரப்பிலிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை என்றும் போலீஸார் கூறுகின்றனர்.  

 16 செல்போன்கள் 

இந்த விடுதியில் தங்கியிருந்த பெண்களிடம் போலீஸார் விசாரித்தபோது அவர்களுக்கு சில நாளுக்குமுன்தான் ரகசிய கேமரா குறித்த சந்தேகம் எழுந்ததாக சொல்லியிருக்கிறார்கள். கேமரா குறித்து விடுதியின் வார்டன்களிடம் கேட்டதற்கு அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர். 

ரகசிய கேமரா சர்ச்சையில் சிக்கிய சஞ்சீவ்விடமிருந்து 16 செல்போன்கள் மற்றும் கேமரா தொடர்புடைய எலெக்ட்ரானிக் சாதனங்கள், போலி அடையாள ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவரின் செல்போன்களில் உள்ள தகவல்களை போலீஸார் ஒவ்வொன்றாக ஆய்வு செய்துவருகின்றனர். வீடியோக்கள் எதுவும் அழிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியவும் போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர். 

சஞ்சீவ் நடத்திய விடுதி  

குளியலறை, படுக்கையறை 

விடுதியில் குளியலறை, படுக்கையறையில்தான் ரகசிய கேமராக்கள் இருந்ததாக போலீஸாரிடம் அங்கு தங்கியிருந்த பெண்கள் தெரிவித்துள்ளனர். அந்தக் கேமராக்களை யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பொருத்தப்பட்டுள்ளன.  விலை உயர்ந்த அந்தக் கேமராவில் பதிவாகும் வீடியோக்கள் தெளிவாக தெரியும் என்கின்றனர் போலீஸார்.  கேமராக்களைப் பொருத்த சஞ்சீவுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். ரகசிய கேமராக்கள் இருப்பதை உறுதிப்படுத்திய பெண்கள், ஆத்திரத்தில் அதை உடைத்துள்ளனர். இருப்பினும் உடைந்த பாகங்களை சேகரித்த போலீஸார் அதில் ஏதாவது வீடியோக்கள் பதிவாகி இருக்கிறதா என்றும் ஆய்வு செய்துவருகிறார்கள். 

 நம்பிதங்கினோம் 

விடுதியில் தங்கியிருந்த பெண்களில் சிலர், போலீஸாரிடம், ``சமூகவலைதளத்தில் சஞ்சீவ் வெளியிட்ட விளம்பரத்தைப் பார்த்து இந்த விடுதியை வந்து பார்த்தோம். எங்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் இருந்தன. சிட்டிக்குள் இந்தவசதியில் விடுதிகள் கிடைப்பது கடினம். இதனால், நம்பிதான் அங்கு தங்கினோம். ஆனால், விடுதிக்குள் ரகசிய கேமராக்களைப் பொருத்தியது அதிர்ச்சியளிக்கிறது. சஞ்சீவ்விடம் முழுமையாக விசாரிக்க வேண்டும்'' என்று பெண்கள் கூறியுள்ளனர்.

விடுதியில் ரகசிய கேமரா இருப்பதை உறுதி செய்ததும் அதிர்ச்சியடைந்த பெண்கள், சம்பந்தப்பட்டவரைப் பிடிக்க போலீஸாருக்கு உதவி செய்துள்ளனர். விசாரணை முடிவில் சஞ்சீவ் குறித்து கூடுதல் தகவல் கிடைக்கும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விடுதியில் தங்கியிருந்த பெண்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க போலீஸ் உயரதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதனால், விடுதியில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவைப்போல  விசாரணையின் விவரங்களையும் போலீஸார் பரம ரகசியமாக வைத்துள்ளனர்.