``போராடி வேலை வாங்குனா... இப்போ அந்த வேலையே எமனாகிடுச்சு..!’’ திருநங்கை நஸ்ரியாவின் உறவினர் | Transgender Nasriya's relative talks about the situation of Nasriya

வெளியிடப்பட்ட நேரம்: 18:12 (04/12/2018)

கடைசி தொடர்பு:18:12 (04/12/2018)

``போராடி வேலை வாங்குனா... இப்போ அந்த வேலையே எமனாகிடுச்சு..!’’ திருநங்கை நஸ்ரியாவின் உறவினர்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் நஸ்ரியா. திருநங்கையான இவர், பல்வேறு போராட்டங்களைக் கடந்து காவலர் பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டார். தற்போது ராமநாதபுரம் ஆயுதப்படையில் பணிபுரிந்துவரும் நஸ்ரியா, நேற்றிரவு எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்தத் தற்கொலை முயற்சியைத் தனது செல்போனில் பதிவிட்டு, தன் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். அவருடன் தங்கியிருந்த பெண் போலீஸார், நஸ்ரியாவை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

திருநங்கை நஸ்ரியா

ஆயுதப்படை குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார் நஸ்ரியா. ஆயுதப்படையில் எழுத்தராகப் பணியாற்றும் பார்த்திபன், சார்பு ஆய்வாளர் ஜெயசீலன் மற்றும் ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் தன்னைப் பற்றியும், தன் நடத்தை குறித்தும் தரக்குறைவாகப் பேசுவதாகவும் அவர்களது தொந்தரவினாலேயேதான் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், தன்னை இந்த நிலைக்குத் தள்ளிய இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் பதிவில் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவவே அதைப் பார்த்தே சக காவலர்கள் நஸ்ரியாவை காப்பாற்றியிருக்கிறார்கள்.  நஸ்ரியாவின் தற்போதைய நிலை குறித்துத் தெரிந்துகொள்ள அவருடைய உறவினரிடம் பேசினோம்.

``நஸ்ரியா நல்லா படிக்கிற பொண்ணு. எப்போ பார்த்தாலும் படிக்கிறதைப் பத்திதான் பேசிட்டு இருக்கும். அவ நல்ல மார்க் வாங்கிதான் போலீஸ் வேலைக்கு செலக்ட் ஆனா. திருநங்கைங்குற காரணத்துக்காக அவளுக்குச் சுலபமா கிடைக்க வேண்டிய வேலை, ஒரு மாசத்துக்கும் மேல கோர்ட்டுல கேஸ் போட்டுப் போராடித்தான் கிடைச்சது. வேலை கிடைச்சிடுச்சுன்னு விடாமல் தொடர்ந்து அடுத்தடுத்தும் அரசுத் தேர்வுக்குத் தன்னை தயார் செஞ்சுட்டு இருந்தா. கிடைக்கிற நேரத்தைப் படிப்புக்காக மட்டும்தான் செலவு பண்ணுவா. அதிகமா யார்கூடயும் பேச மாட்டா. கோர்ட்டு, கேஸுன்னு அலைஞ்சு திரிஞ்சு போராடி வாங்குன வேலையே இன்னைக்கு அவளுக்கு எமனாயிருக்கு...

திருநங்கை நஸ்ரியா

Photo Credits: Minnambalam

மூணு வருஷமா போராடி, இனியும் அடையாள அட்டை கொடுக்கலைன்னா தற்கொலை பண்ணிப்பேன்னு சொன்னதுக்கப்புறம்தான் அடையாள அட்டையே அவளுக்குக் கொடுத்தாங்க. அந்தளவுக்கு எடுக்கிற ஒவ்வொரு காரியத்திலேயும் அவளுக்குத் தொந்தரவு இருந்திருக்கு.

பரமக்குடியில அவளுடைய குடும்பத்தினர் இருக்காங்க. அவங்க வீட்டுல உள்ளவங்க நஸ்ரியா திருநங்கைன்னு தெரிஞ்சும் அவளை ஏத்துக்கிட்டாங்க. கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவங்கிறதால போலீஸ் வேலை கிடைக்கும்போது ரொம்பவே சந்தோஷப்பட்டாம்மா. அவ வேலைக்குப் போறதைப் பார்த்துட்டு எங்க சமூகத்தைச் சேர்ந்தவங்களும் சந்தோஷப்பட்டாங்க. வீட்டு பக்கத்துல உள்ள பசங்களுக்கு படிப்புல ஏற்படுற சந்தேகத்தை நேரம் காலம் பார்க்காம தீர்த்து வைப்பா. நேத்து அவ தற்கொலைக்கு முயன்ற வீடியோவைப் பார்த்ததும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டுடுச்சு. ஆசை ஆசையாய் வளர்த்த புள்ளை இப்படிப் பண்ணிகிட்டான்னு மூச்சே நின்னுடுச்சு. அவளுக்குப் போன் பண்ணிட்டே இருந்தேன். மறுநாள் காலையில ஆஸ்பத்திரியில் கண்ணு முழிச்சதும் போன்போட்டு பேசுனா... 'எனக்கு ஒண்ணும் ஆகலை... நான் நல்லா இருக்கேன்மா'ன்னு சொல்லிட்டு... பேசிட்டு இருக்கும்போதே போனை வைச்சிட்டா. அதுக்கு அப்புறம் அவ போனுக்கு டிரை பண்ணேன்... ஸ்விட்ச் ஆஃப்ன்னு வந்துச்சு. நல்லவேளை பொண்ணு பொழைச்சுட்டா. ஆனா போராடி கிடைச்ச வேலையை, இதை வைச்சு தொடர விடாம பண்ணிடுவாங்களோன்னு பயமா இருக்கு'' என்று முடித்தார்.

திருநங்கைகள் அவர்களுக்கான உரிமையை அவ்வளவு எளிதாகப் பெற்றுவிடவில்லை. இன்னும் இந்தச் சமூகத்தில் ஏதோ ஒரு மூளையில் அவர்கள் ஒடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்..!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்