வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:20:00 (04/12/2018)

மின்மயமாகும் சேலம் - கரூர் ரயில் பாதை! - டிசம்பர் 20-ல் சோதனை ஓட்டம்

சேலம் - கரூர் அகல ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ் நாமக்கல்லில் மின்மாற்றி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடித்து, டிசம்பர் மாதம் 20-ம் தேதி சோதனை ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சேலம்-கரூர் அகல ரயில் பாதை நாமக்கல் வழியாகச் செல்கிறது. சுமார் 85 கி.மீட்டர் தொலைவு கொண்ட இந்தப் பாதையில் 5 ஆண்டுகளுக்கு மேலாகப் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தப் பாதையை மின்மயமாக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.

இதையொட்டி ரயில் பாதையில் மின்கம்பங்கள் நடப்பட்டு, வயர்கள் இழுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக நாமக்கல் ரயில் நிலையம் அருகே புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்தப் பணி முடிவடையும் நிலையை எட்டி உள்ளது.

இது குறித்து ரயில்வே பணியாளர்களிடம் பேசினோம். ``சேலம் - கரூர் அகல ரயில்பாதை மின்மயமாக்கும் திட்டத்தில் நாமக்கல் ரயில் நிலையம் அருகே மின்மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான மின்சாரம் சேந்தமங்கலம் பகுதியிலிருந்து கொண்டு வரப்படுகிறது. இந்த மின்மாற்றியின் முக்கியப் பணி 110 கிலோ வாட்ஸ் மின்சாரத்தைக் 25 கிலோ வாட்ஸ் மின்சாரமாகக் குறைத்து கொடுப்பதே ஆகும்.

தற்போது இப்பணி 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இந்த ஆண்டுக்குள் 100 சதவிகிதம் நிறைவடையும். இதேபோல் மின்வயர் அமைக்கும் பணியும் 1 கி.மீட்டர் தொலைவு மட்டுமே நிறைவு பெறாமல் உள்ளது. அனைத்துப் பணிகளையும் வருகிற டிசம்பர் மாதம் 19-ம் தேதிக்குள் முடித்து, 20-ம் தேதி சோதனை ஓட்டத்துக்கு ஏற்பாடு நடந்து வருகிறது’’ என்றனர்.

இதையொட்டி சேலம் - கரூர் அகல ரயில் பாதையில் கடந்த சில நாள்களாகப் பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. ஆனால், சரக்கு ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க