வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (04/12/2018)

கடைசி தொடர்பு:19:40 (04/12/2018)

தாம்பரம் மாணவியை கடத்த முயற்சியா? - காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா

மூன்று பெண்கள் தன்னைக் கடத்த முயன்றதாகத் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி புகார் அளித்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறை விசாரணையில் மாணவி கடத்தல் சம்பவம் உண்மைதானா எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

தாம்பரம் மாணவி கடத்தல்

காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்குத் தாம்பரம், கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் தாரணி (பெயர் மாற்றம்). இவர் கிழக்குத் தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள ஒரு தட்டச்சு நிலையத்தில், தட்டச்சு பயின்று வருகிறார். வழக்கமாகக் காலை 5.30 மணிக்கு தட்டச்சு பயிற்சி நிலையத்துக்குச் செல்வார். அதேபோல நேற்றும் சென்றவர் உடனடியாக வீட்டுக்குத் திரும்பியுள்ளார். இதுகுறித்து வீட்டில் உள்ளவர்கள் கேட்டதற்கு, ‘காலையில் டைப்ரைட்டிங் செல்லும்போது அந்த வழியாகக் குட்டி யானை வாகனத்தில் வந்த மூன்று பெண்கள் என்னை மறித்து வாயில் எதையோ ஊற்றினார்கள். என்னைக் கடத்த முயற்சி செய்தார்கள். நான் அவர்களிடமிருந்து தப்பித்து வந்துவிட்டேன்’ எனப் பதற்றத்துடன் கூறினார்.

இதையடுத்து, அந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மகளை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உடல்நலக் குறைவு எதுவும் இல்லாததால் நேற்று இரவு அவரை மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். இந்தச் சம்பவம் பத்திரிகையாளர்களுக்குத் தெரியவர, அனைவரும் காவல்நிலையத்தில் மாணவி கடத்தல் குறித்து தகவல் கேட்டனர். இதைத் தொடர்ந்து அந்த காவல்நிலையத்தில் உள்ள காவலர்கள் மாணவியின் வீட்டுக்குச் சென்று புகார் வாங்கினார்கள். புகாரை அடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா அனைத்தையும் சோதனை செய்தார்கள். ஆனால், அந்த குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குட்டியானை வாகனம்கூட செல்வது பதிவாகவில்லை. ஒரே ஒரு ஆட்டோ மட்டும் சென்றுள்ளது. அந்த ஆட்டோவும் வழக்கமான சவாரிக்குச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து மாணவி சொல்வது உண்மைதானா, இல்லை கடத்தல் நாடகம் ஆடுகிறாரா எனக் காவல்துறைக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க