வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (04/12/2018)

கடைசி தொடர்பு:20:20 (04/12/2018)

பெண்கள் களத்தில் இறங்க வேண்டும்! - தஞ்சை சகோதரிகளைப் பாராட்டி உற்சாகப்படுத்திய நடிகர் கமல்

ஒரத்தநாடு அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் கலந்துகொண்டு டாக்டர்களுக்கும், பொது மக்களுக்கும் உதவிகள் செய்த சகோதரிகளை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். பாதிப்புகளைப் பார்வையிட வந்த நடிகர் கமலும் அந்தச் சகோதரிகளைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து பெருமைப்படுத்தியுள்ளார்.

ஒரத்தநாடு அருகே உள்ளது சோழகன் குடிக்காடு. இந்த ஊரைச் சேர்ந்த சகோதரிகள் புவனா மற்றும் நந்தினி. புவனா கல்லூரி முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறார். நந்தினி திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். கஜா புயலால் ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மக்கள் வாழ்வாதாரங்களான வீடுகள், தென்னை மரங்கள், கால்நடைகள் என அனைத்தையும் தொலைத்துவிட்டு  நிர்க்கதியாய் நின்றனர். புயலால் மக்களுக்கு தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அரசு மருத்துவ முகாம் நடத்தி வருகிறது.

தனியார் மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வலர்கள் தங்கள் பங்குக்கு முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். ஒரே நேரத்தில் பல கிராமங்களுக்குச் சென்று அரசு மருத்துவர்கள் முகாம் அமைத்து சிகிச்சை அளித்ததால் நர்ஸ்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பல ஊர்களில் டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளித்தும் வந்தனர். இந்த நிலையில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டைப் பகுதிகளில் நடந்த மருத்துவ முகாம்களில் தாமாக முன்வந்து கலந்துகொண்டு டாக்டர்களுக்கு உதவி செய்ததோடு சிகிச்சை பெற வந்த மக்களுக்கும் பெரும் உதவி செய்து ஆறுதலாகவும் இருந்து வந்துள்ளனர் இந்தச் சகோதரிகள். இவர்கள் ஈடுபாட்டோடு செயல்பட்டதைக் கண்டு பொதுமக்கள் பலர் மனதாரப் பாராட்டியதோடு வாழ்த்தவும் செய்தனர்.

இதுகுறித்து புவனாவிடம் பேசினோம். ``கஜா புயல் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என நான் கனவில் கூட நினைக்கவில்லை. அமைதியாக இருந்த எங்க ஊரான சோழகன் குடிகாட்டை அலங்கோலமாக மாற்றிப் போட்டுவிட்டுச் சென்றது கஜா. எங்க ஊரே இப்படி பாதித்து இருக்கே மற்ற ஊர் எவ்வளவு பாதித்திருக்கும் என்ற கவலை என்னைத் தொற்றிக்கொண்டது. அதோடு கஜாவுக்குப் பிறகு மனம் நொந்த நிலையில், எங்க ஊர் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அது மேலும் என்னை பதற்றமடைய வைத்தது. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் பல வகையில் உதவி செய்து வருகின்றனர்.  நாம பொம்பளைப் பிள்ளைகள் தானே என நினைக்காமல் நானும் என் தங்கையும் எங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என முடிவெடுத்தோம். அதன்படி மருத்துவ முகாம்களுக்கு உதவி செய்வதற்கு ஆட்கள் தேவை என தெரியவந்தது.

அதன் பிறகு பத்து நாள்களாக பல ஊர்களில் நடந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு உதவி செய்தோம் .டாக்டர்கள் சொல்லும் மாத்திரைகளை எடுத்துக் கொடுப்பது, வாழ்வாதாரத்தை இழந்து விரக்தி நிலையில் வருபவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி தேற்றுவது போன்ற உதவிகளைச் செய்தோம். இதற்கு என் அம்மாவும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். எங்க ஊரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பலரும் எங்களைப் பாராட்டினார்கள். எங்க பகுதிக்குப் பார்வையிட வந்த நடிகர் கமல் இதை அறிந்து பெண்கள் இப்படித்தான் களத்தில் இறங்க வேண்டும் என எங்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார். அது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. துயரத்தில் தவித்த மக்களுக்கு எங்களால் முடிந்த உதவியைச் செய்ததைப் பெருமையாகக் கருதுவதோடு மனதுக்கு திருப்தியையும் தந்தது என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க