`சுங்கக் கட்டணம் பெரிய பிரச்னையா இருக்கு!’ - வேதனையில் கொல்லிமலை மக்கள் | Arappaleeswarar Temple devotees are disappointed that there's a toll to enter the falls

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (04/12/2018)

கடைசி தொடர்பு:21:20 (04/12/2018)

`சுங்கக் கட்டணம் பெரிய பிரச்னையா இருக்கு!’ - வேதனையில் கொல்லிமலை மக்கள்

கொல்லிமலைக்குச் சுற்றுலா செல்பவர்கள் 2 இடங்களில் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். சொந்தக் கிராம மக்களே மலையின் இயற்கை அழகைச் சுற்றிப்பார்க்க முடியாமல் வேதனையடைந்து வருகின்றனர் எனத் தெரியவந்ததையடுத்து கொல்லிமலைக்குப் பயணித்தோம்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையானது தமிழகளவில் சுற்றுலாத் தலங்களுக்குப் புகழ்பெற்றதாகும். விடுமுறை நாள்கள், விசேஷ நாள்களில் தினசரி 3,000 முதல் 5,000 சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு வந்து செல்கின்றனர். மலையின் மீது உள்ள 14 ஊராட்சிகளில் 100 கிராமங்கள் இருக்கின்றன. இதில், 30,000 பேருக்கு மேல் வசிக்கின்றனர்.

ஒரு வருடத்துக்கு முன்வரை கொல்லிமலைக்குச் சுற்றுலா செல்பவர்வகள் 3 இடங்களில் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது.
தற்போது, கொல்லிமலை மலைப்பாதை தொடங்கும் இடமான காரவள்ளியில் 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. மலை உச்சியில் உள்ள அறப்பளீஸ்வரர் கோயில் செல்லும் வழி, மாசிலா அருவி செல்லும் வழியிலும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால் கொல்லிமலைக்குச் செல்லும்போது 100 கி.மீ நான்கு வழிச்சாலைகளில் பயணம் செய்தால் சுமார் 100 ரூபாய் வரை சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. இதுபோல் மலையிலிருந்து சொந்த வாகனங்களில் (கார், ஜீப்) விவசாய விளைபொருள்களை எடுத்துச் செல்ல, மருத்துவமனை உள்ளிட்ட வேறு பணிகளுக்கு நாமக்கல் வந்துவிட்டுச் செல்லும் வாகன ஓட்டிகளிடமும் காரவள்ளி சுங்கச் சாவடியில் ரூ.30 முதல் ரூ.50 வரை சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. மலைக் கிராம மக்கள் கிராமத்திலிருந்து வெளியூர் சென்றுவிட்டு மீண்டும் சொந்தக் கிராமத்துக்குச் சொந்த வாகனத்தில் செல்ல சுங்கக் கட்டணம் செலுத்த நிர்பந்திப்பது அந்த மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதுபற்றி தமிழ்நாடு பழங்குடியினர் மலையாளி நல அமைப்பு மாநிலத் தலைவர் கே.குப்புசாமியிடம் பேசினோம். ``மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லும் வாகனத்துக்குக் கூட சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் நிலை இருந்தது. சொந்த வீட்டுக்குச் செல்ல சுங்கம் செலுத்தும் நிலை தவிர்க்கப்பட வேண்டும் என காரவள்ளி சுங்க வசூல் மையம் முன்பு மலைக் கிராம மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டோம். இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் மலை தொடக்கத்தில் உள்ள காரவள்ளி சுங்கக் கட்டணத்தில் வசூல் செய்து வந்த சோதனைச் சாவடியை அகற்றினர். ஆனால், மலை உச்சியில் உள்ள அறப்பளீஸ்வரர் கோயில் செல்லும் வழி, மாசிலா அருவி செல்லும் வழியிலும் நுழைவுக் கட்டணம் இன்னமும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க