`சாத்தான்குளத்தில் கரடி நடமாட்டமா?’ - விவசாயிகள் அச்சம் | bear presence in sattankulam cause fear among farmers

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:21:00 (04/12/2018)

`சாத்தான்குளத்தில் கரடி நடமாட்டமா?’ - விவசாயிகள் அச்சம்

சாத்தான்குளம் பகுதியில் உள்ள தோட்டங்களில் கரடியின் காலடித் தடங்கள் போன்று தென்பட்டுள்ளதால் அப்பகுதியில் கரடி நடமாட்டம் உள்ளதோ என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

கரடியின் கால்த்தடம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ள அறிவான்மொழி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவருக்கு அப்பகுதியில் சொந்தமாகத் தோட்டம் உள்ளது. இந்நிலையில், இவரது தோட்டத்தில் சில பகுதிகளில் மண்ணில் சில காலடித் தடம் தென்பட்டுள்ளது. இது குறித்து முருகேசன், ஊர்க்காரர்களிடம் கூறினார். பின்னர், சாத்தான்குளம் வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அந்தத் தோட்டத்தில் காலடித் தடங்களைத் தேடி அவற்றைப் புகைப்படம் எடுத்தனர்.

வனத்துறை அதிகாரிகள் விசாரணை

கரடியின் காலடித் தடம்போல இருப்பதாகவும், இருப்பினும் அதை உறுதி செய்வதற்காகப் புகைப்படங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர் ஆனாலும், கரடி தென்படவில்லை.

கரடியின் கால்த்தடம்

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் புலி, கரடி, யானை, குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. ஆற்றுப் பகுதிகள் வழியாகச் சில சமயங்களில் ஊருக்குள் புகுந்துவிடுவது வழக்கம். அதே போல, நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி வழியாக சாத்தான்குளம் பகுதிக்கு வந்து இருக்கலாம் என்கின்றனர் விவசாயிகள். கரடி காலத் தடம் போன்று காலடித் தடங்கள் தென்பட்ட தகவல் பரவியதால் அப்பகுதியினர் கரடி ஊருக்குள் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க