மதுரையில் தமிழ் தொழில்முனைவோர்கள் மாநாடு - `எழுமின்'! | The rise conference at Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 19:28 (04/12/2018)

கடைசி தொடர்பு:19:28 (04/12/2018)

மதுரையில் தமிழ் தொழில்முனைவோர்கள் மாநாடு - `எழுமின்'!

ஆங்கிலத்தில் 'The Rise' என்றும், தமிழில் 'எழுமின்' என்றும் அறியப்படுகின்ற அனைத்துலக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாட்டை, தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம், மேலும் சில அமைப்புகளின் ஆதரவோடு மதுரையில் வரும் டிசம்பர் 28, 29, 30 தேதிகளில் நடத்தவுள்ளது.

ஜெகத் கஸ்பார் 

இந்த மாநாட்டை நடத்துவதற்காக முன்முயற்சியெடுத்துவரும் அருட்தந்தை ஜெகத் கஸ்பார், பத்திரிகையாளர் சந்திப்பில் கூறும்போது, ``வேலைவாய்ப்பு தேடுவோர்களாக இருக்கும் தமிழர்களை, வேலைவாய்ப்பை வழங்கும் தொழில்முனைவோர்களாக உருவாக்குவதே இந்த மாநாட்டின் மையக்கருவாகும். தொழில் செய்வதில் ஈடுபாட்டுடனும், பல்வேறு திட்டங்களுடனும் இருக்கக்கூடிய தமிழ் இளைஞர்களை, பெருந்தொழிலதிபர்களாக இருக்கும் தமிழர்களோடு இணைக்கும் முயற்சியாக இந்த மாநாடு நடக்கவுள்ளது. அவர்கள் இருவருக்கும் இடையே உரையாடல்கள் நிகழ்த்தப்பட உள்ளது. தொழில்துறையில் ஈடுபடும் தமிழர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதன்மூலம், பல்லாயிரம் கோடி மதிப்பிலான உலகப்பொருளாதாரத்தை தமிழர்களால் உருவாக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஊக்குவிப்பதற்கும் இந்த மாநாடு பயன்படும். 

இதன்மூலம், இரண்டாம் அலை தமிழ் தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்படும். குறிப்பாக, தமிழர்களுக்கு மூலதன வலுவை எப்படி உருவாக்குவது என்பது குறித்த விவாதங்கள் நடத்தப்படும். இந்த மாநாட்டில், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா, கத்தார், ஓபன் ஜெர்மனி, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 17 நாடுகளைச்சேர்ந்த தமிழ் தொழிலதிபர்கள் கலந்துகொள்ள உறுதி செய்துள்ளார்கள். 500, தொழில்முனைவோர்கள் மற்றும் திறனாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்றார். பத்திரிகையாளர்கள் சந்திப்பின் இறுதியில் 'எழுமின்' அமைப்பின் முத்திரை வெளியிடப்பட்டது.