ஏரியில் மூழ்கி உயிருக்குப் போராடிய 6 பேரை காப்பாற்றிய இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்! | Tanjore Youth rescues 6 persons from drowning

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (04/12/2018)

கடைசி தொடர்பு:21:30 (04/12/2018)

ஏரியில் மூழ்கி உயிருக்குப் போராடிய 6 பேரை காப்பாற்றிய இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்!

ஒரத்தநாடு அருகே ஏரிக்குக் குளிக்கச் சென்றபோது சேற்றில் சிக்கி தண்ணீரில் தத்தளித்து உயிருக்குப் போராடிய 6 பேரை இளைஞர் ஒருவர் தன் உயிரை பணயம் வைத்துக் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் அவரைப் பாராட்டி வருவதோடு அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காப்பாற்றப்பட்டவர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது வெள்ளையன் ஏரி. இந்த ஏரி சமீபத்தில் துார்வாரப்பட்டதாலும் தொடர்ந்து பெய்த மழையாலும் ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில், கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பில் மின்கம்பங்கள் சாய்ந்துவிட்ட நிலையில் இன்னும் சரிசெய்யப்படாததால் இந்த ஊருக்கு இன்னும் மின்சாரம் கொடுக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் அந்தப் பகுதியைச் சேர்ந்த சுதந்திரதேவி தன் மகள் சுடர்விழியை அழைத்துக்கொண்டு ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த சுபதினா, கல்பனா மற்றும் ஆரோக்கியமேரி ஆகியோரும் ஏரியில் குளித்துள்ளனர். 

ஸ்ரீதர்

அப்போது சுடர்விழி, சுபதினா, கல்பனா ஆகிய 3 பேரும் சற்று ஆழத்துக்குச் சென்று குளித்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுதந்திராதேவியும் ஆரோக்கியமேரியும் அடுத்தடுத்து ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்று 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களும் சேற்றில் சிக்கினர். இந்தநேரம் அந்த வழியாக வந்த முத்துச்சாமி என்ற விவசாயி, உடனே ஏரியில் இங்கி தண்ணீரில் தத்தளித்த 5 பேரையும் காப்பாற்ற முயன்றார். ஆனால், அவரும் சேற்றில் சிக்கினார். சிக்கிய அனைவரும் உயிர் பயத்தில் சத்தம் போட்டுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வயலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த ஸ்ரீதர் என்ற இளைஞர், தண்ணீருக்குள் குதித்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 6 பேரையும் போராடி கரைக்குக் கொண்டு வந்து காப்பாற்றினார். பின்னர், அவர்களுக்கு அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது  6 பேரும் நலமுடன் உள்ளனர். ஸ்ரீதர் பி.டெக் படித்துவிட்டு விவசாயத்தில் அப்பாவுக்கு உதவி செய்து வருகிறார். 6 பேர் உயிரைக் காப்பற்றிய ஸ்ரீதரின் வீட்டுக்கு வந்து பொதுமக்கள் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருவதோடு அரசு இவரை கௌரவித்து விருது வழங்கி பாராட்ட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

ஸ்ரீதர்

சுந்ததிர தேவியிடம் பேசினோம், ``என் மகள் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்ததுமே அம்மா எனக் கத்தினால் தவித்துப்போய் காப்பாற்றச் சென்ற நானும்  தண்ணீர் அதிகமாக இருந்ததால் தத்தளிக்க ஆரம்பித்தேன் என் கண் முன்னேயே என் மகள் கொஞ்சம் கொஞ்சம் மூழ்க ஆரம்பித்ததைப் பார்த்து நெஞ்சே துடித்தது. என் உயிரை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள் என் மகளைக் காப்பாற்று எனக் கடவுளிடம் வேண்டினேன். அடுத்த சில நொடிகளில் கடவுள்போல வந்த ஸ்ரீதர் தன் உயிரைப் பற்றி யோசிக்காமல் தண்ணீரில் இறங்கி எங்க 6 பேரையும் காப்பாற்றினார். இதை எங்க உசுர உள்ள வரை மறக்க மாட்டோம் என நெகிழ்ச்சியுடன் கைகூப்பி நன்றி கூறினேன்’’ என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க