வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:22:00 (04/12/2018)

`15 ஆண்டுகளில் 19,000 கருக்கலைப்பு செய்திருக்கிறார் ஆனந்தி!' - திருவண்ணாமலை கலெக்டர் பகீர்

திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்திவந்த பெண், 15 ஆண்டுகளில் 19,000 கருக்கலைப்பு செய்துள்ளார் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை

திருவண்ணாமலை பொன்னுசாமி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தி (45). இவர் 12- ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, ஒரு டாக்டரிடம் 20 வருடத்துக்கு முன்பு எடுபிடியாக வேலை செய்துள்ளார். அந்த டாக்டரிடம்  இருந்து கருக்கலைப்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொண்ட ஆனந்தி, கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகத் தனியாகவே சட்டவிரோதமாகப் பெண் சிசு கருக்கலைப்பு செய்து வந்துள்ளார். 

இந்த சட்டவிரோத கருக்கலைப்பு செய்வது மருத்துவ இயக்குநருக்கு தெரியவந்து கடந்த 2013-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன்பிறகும், கருக்கலைப்பு தொழிலை விடாமல் தொடர்ந்து செய்யவே மீண்டும் 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மீண்டும் ஜாமீனில் வெளியேவந்த ஆனந்தி, திருவண்ணாமலை மாவட்ட மருத்துவத் துறையில் கவனிக்கவேண்டியவர்களை முறையாகக் கவனித்துவிட்டு, தன் தொழிலை வழக்கம்போல் தொடங்கியுள்ளார்.     

ஆனந்தி

இந்தமுறை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியருக்கும், மாநில மருத்துவ கண்காணிப்புக் குழுவுக்கும் புகார் கூற, கண்காணிப்பு குழுவினர்கள் கடந்த ஒரு வாரமாக ஆனந்தியின் வீட்டை மறைந்திருந்து நோட்டமிட்டு வந்துள்ளனர். அங்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வது உறுதியானதும், கண்காணிப்புக் குழுவினர் கடந்த 2-ம் தேதி ஆனந்தி வீட்டுக்குள் நுழைந்து அதிரடி சோதனை போட்டனர். அப்போது, அங்கு கருக்கலைப்புக்குப் பயன்படுத்தி வந்த லேப்டாப் வடிவிலான ஸ்கேன்  கருவி, ஊசிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். கருக்கலைப்பில் ஈடுபட்ட ஆனந்தியையும் அவருக்குத் துணையாக இருந்த அவரின் கணவர் தமிழ்செல்வன் மற்றும் ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஆகியோரைப் பாலின தேர்வு தடுப்புச் சட்டம் 419,420 கீழ் வழக்கு பதிந்து கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மாவட்ட ஆட்சியர்

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், ``திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அளவில் பெண்குழந்தை பிறப்பு  சராசரி விகிதத்தைவிட மிக குறைந்தே காணப்பட்டு வருகிறது. சட்டவிரோத கருக்கலைப்பு செய்த ஆனந்தியின் ஸ்கேன் கருவி, போன் கால் ஆகியற்றை தீவிரமாகச் சோதனை செய்ததில் பல திகிக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. பள்ளிப்படிப்பையே தாண்டாத ஆனந்தி கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 19,000-க்கும் மேல் சிசு கருக்கலைப்பு செய்திருக்கிறார். இந்தத் தகவலைக் கேட்கும்போதே எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது என்றவர், ஆனந்தி மீதும் அவருக்குத் துணையாக இருந்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும், பெண் சிசு கருவில் அழிப்பதைத் தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க