வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (05/12/2018)

கடைசி தொடர்பு:11:00 (05/12/2018)

பாம்பன் தூக்குபாலத்தில் திடீர் இடைவெளி - ரயில்கள் ரத்துசெய்யப்பட்டதால் பயணிகள் அவதி!

 பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட இடைவெளியைச் சரிசெய்யும் பணி நிறைவடையாததால், ராமேஸ்வரத்திலிருந்து செல்லும் ரயில்கள் அனைத்தும் இன்று மாலை ரத்துசெய்யப்பட்டன. இதனால், முன்பதிவுசெய்திருந்த பயணிகள் பாதிப்படைந்தனர்.

பாம்பன் தூக்கு பாலத்தில் பழுது நீக்கும் பணியில் ஊழியர்கள்

நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில், பாம்பன் கடலின்மீது முதன் முதலாக உருவாக்கப்பட்டது பாம்பன் ரயில் பாலம். 1914 -ம் ஆண்டு முதல் ரயில் பயணம் நடந்துவரும் இந்தப் பாலத்தின் இடையே கப்பல்கள் செல்லும் வகையில் 'ஷெர்ஷர் ' தூக்குபாலம் ஒன்று திறந்து மூடும் வகையில் உள்ளது. கஜா புயலின்போது, தீவுப் பகுதியில் உள்ள படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தும் வகையில் இந்த தூக்கு பாலம் திறக்கப்பட்டது. அப்போது, தூக்கு பாலத்தைத் திறக்க உதவும் இரும்பு வடம் பழுதுபட்டு, உடனடியாக சரி செய்யப்பட்ட நிலையில், ரயில் போக்குவரத்து தொடர்ந்து நடந்துவந்தது.
இந்நிலையில், நேற்று தூக்குபாலத்தின் இரு பகுதிகளும் இணையும் இடத்தில் திடீர் என இடைவெளி ஏற்பட்டது. இதைக் கண்டறிந்த ரயில்வே ஊழியர்கள், இந்த இடைவெளியைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு ஏதுவாக, வெளியூர்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு மாலை நேரத்தில் வரும் ரயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டன. பழுதுநீக்கும் பணிகள் நிறைவடைந்த பின்,  ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் இன்றி மண்டபம் வரை இயக்கப்படும் என்றும், அங்கிருந்து  இரவு 9 மணிக்குமேல் பயணிகளுடன் ரயில் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுதால் அவதியடைந்த பயணிகள் 

ஆனால், இரவு வரை பழுதுபார்க்கும் பணி முழுமையாக முடியவில்லை. இதையடுத்து, இரு ரயில்களும் முற்றிலும் ரத்துசெய்யப்பட்டது. இதனால், சென்னை செல்வதற்காக மண்டபம் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளை ரயில் நிலைய அதிகாரிகள் சமாதானம் செய்து திருப்பி அனுப்பினர். இதனிடையே, ராமேஸ்வரத்திலிருந்து இன்று இரவு புறப்படும் அஜ்மீர் ஹம்சபர் வாராந்திர விரைவு ரயில், இன்று காலை 7 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.