வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (05/12/2018)

கடைசி தொடர்பு:10:14 (05/12/2018)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1,500 கிலோ கடல்அட்டை பறிமுதல்!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக குடோனில் சட்டவிரோதமாகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 1,500 கிலோ உலரவைக்கப்பட்ட கடல் அட்டைகளை, வன உயிரின பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

வங்காளவிரிகுடா கடல் பகுதியில் உள்ள  மன்னார்வளைகுடா பகுதி, பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளப்பகுதியாகும். உலகில் உள்ள பவளப்பாறைகளில் 17 சதவிகிதம் மன்னார் வளைகுடா பகுதியில் இருப்பதால், பல்வேறு அரிய வகையான கடல்வாழ் உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன. இந்திய கடல்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், இப்பகுதி பாதுகாக்கப்பட்ட கடல் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடல் பசு, கடல் குதிரை, கடல் அட்டை, பால்சுறா, சங்கு வகைகள் உள்ளிட்ட 53 வகையான கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதித்துள்ளது.

தடை விதிக்கப்பட்டிருந்தாலும், கடல் அட்டைகளை விற்பனையில் அதிக விலை கிடைப்பதால், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழிலில் சில மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றனர். இதைத் தடுக்கும் பணியில் வன உயிரினப் பாதுகாப்புத் துறை, கடலோர பாதுகாப்புக் குழுமம் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டுவந்தாலும், கடல் அட்டை கடத்தல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி கீழ அரசரடி பகுதியில் உள்ள ஒரு குடோனில் கடல் அட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக, மன்னார்வளைகுடா கடல்வாழ் உயிரினக் காப்பகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், அப்பகுதில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் வன உயிரினப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சட்டவிரோதமாக தடைசெய்யபட்ட 1,500 கிலோ கடல் அட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதில், பதப்படுத்தப்பட்டு உலரவைக்கப்பட்ட நிலையில் உள்ள கடல் அட்டைகளை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர்.

இது தொடர்பாக தாளமுத்து நகரைச் சேர்ந்த நாகூர் மைதீன். ஜெயலானி தெருவைச் சேர்ந்த முகைதீன் மற்றும் புளியமரத்தடி தெருவைச் சேர்ந்த அருணாசலம் ஆகிய  3 பேரை கைதுசெய்தனர். முதல்கட்ட விசாரணையில், இலங்கைக்குக்  கடத்த இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.  கடந்த சில நாள்களுக்கு முன், தூத்துக்குடியில் ஒரே நாளில் இரண்டு பகுதிகளில் இலங்கை வழியாக சீனாவுக்குக் கடத்த முயன்ற 450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்செய்யப்பட்டன. இந்நிலையில், 1,500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

    

நீங்க எப்படி பீல் பண்றீங்க